e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

இலங்கையில் இன்று 65 ஆவது சுதந்திர தினமாம்...

No comments
ஆசிய நாடுகள் அன்று வெள்ளைக்காரன் ஆட்சியில் அடிமை பட்டிருந்த போது  கிடைத்த சுதந்திரம் இபொழுது இருக்கின்ற (பெயரளவில் மட்டும்) ஜனநாயக ஆட்சியில் கிடைத்தால் நாம் எல்லோரும் பெரும் பாக்கியவான்களே. அன்றைய வெள்ளைக்காரன் ஆட்சி காலங்களில் இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் வாழ்ந்த மக்கள் பட்ட அவலங்களை விட அதிகமாகவே இன்றைய நாட்களில் அந்த மக்கள் அனுபவித்து கொண்டிருக்கின்றார்கள். வெள்ளையனே வெளியேறு என்று கோஷமிட்டு இருந்த கொஞ்ச நெஞ்ச சுதந்திர வாழ்கையும் ஜனநாய திருட்டு கூட்டத்திடம் அடமானம் வைத்து மிருகத்துக்கும் கேவலமாக வாழ்கின்ற வக்கத்த கூட்டமாகவே இன்றும் இருக்கின்றோம்.   

ஒரு நாட்டின் சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் ? இன, மொழி, மத வேறுபாடுகள் ஈன்றி உணவிலும், கல்வியிலும், அரசியலிலும், வேலைவாய்ப்பிலும், பெண் விடுதலையிலும் கருத்துவேறுபாடுகள் அற்று ஆண், பெண் என்ற இரு சாராருக்கும் சமஅளவில் கிடைக்கவேண்டிய  சமத்துவ உரிமை எப்பொழுது ஒரு நாட்டில் சீராக, நிலையாக நிலவுமோ அதுவே என் பார்வையில் ஒரு நாட்டின் சுதந்திரம். வீரத்தாலும், தியாகங்களாலும், கண்ணீராலும் கிடைக்கப்பெற்ற சுதந்திர வேட்கையை, இது வரைக்கும் எம் மக்கள் அனுபவித்ததாக ஒரு நிகழ்வின் சான்றுகள் கூட இதுவரை இல்லை. அன்றைய வெள்ளைக்காரன் ஆட்சியில் தான் எங்களது நாடுகள் தொழிநுட்பம் சார்ந்த அபிவிருத்திகளில் வளர்ச்சி கண்டிருந்தது. கண்டிப்பாக அவை அனைத்தும் வெள்ளையனின் நன்மைக்காகவே ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் இன்றைய நமது நாடுகளின் சிறு அபிவிருத்தியின் அடிக்கல் அவையே. எங்கள் நாடுகளில் இருந்த மனித, இயற்களை வளங்கள் அனைத்தையும் சுரண்டி கொண்டு வெள்ளையன் அவனது நாடுகளை வளம் பொருந்திய, வலிமை பெற்ற, பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளாக உருவாக்கிக்கொண்டான். சுதந்திரம் பெற்று இன்றுவரை நம்மை எல்லாம் ஜனநாய ஆட்சி என்ற பெயரில் அயோக்கியர்களிடமே அடமானம் வைத்து சென்று விட்டான் ஐரோப்பிய வெள்ளைக்காரன்.


            

இன்று இலங்கை என்ற ஒரு குட்டி தீவின் 65 ஆவது சுதந்திர தினமாம். 04-02-1948 யில் இலங்கைக்கு சுதந்திரம் என்ற ஒரு பெயர் மட்டுமே அங்கு வாழும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சுதந்திர வேட்கைக்காக போராடியதாக பெரிதாக சொல்லும் படியான தியாகிகள் அங்கே இல்லை. இந்திய நாட்டிற்கு சுத்திரம் கிடைத்து ஒரு வருட இடைவெளியில் கிடைத்தவரை எடுத்துக்கொண்டு, இனி தேவை இல்லை என்ற நிலையிலேயே ஆங்கிலேயேன் இலங்கையை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்திக்கொண்டான். அங்கே அன்றிருந்து இன்றுவரை தமிழர், சிங்களவர்  இரு வேறு இன மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இருவருக்குமிடையே எந்த விதத்திலும் ஒற்றுமை இல்லாத கலாச்சாரமும், பண்பாட்டு பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் அமைந்திருந்தது.  தமிழர்களில் பெரும்பான்மையாக இந்து மதத்தை தழுவிய மக்களாகவே இருகின்றனர், சிங்களவரில் பெரும்பான்மையினராக பௌத்த மதத்தை சார்ந்தவர்களாக இருக்கின்றனர். அத்தோடு சிறுபான்மையாக இரு இனத்தை சேர்ந்தவர்கள் கிறித்தவரும், முஸ்லீம் மதத்தை தழுவி வாழ்ந்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் அங்கே தமிழர்கள் மட்டுமே ஜீவித்து வந்த்திருக்கின்றனர்.


பின்னர் ஆரிய படையெடுப்பின் காரணமாக சிங்களவர்கள் இலங்கை தீவில் குடியேறி உள்ளதாக பல வரலாறு சான்றுகள் தெளிவாக கூறுகின்றன. பிற்காலத்தில் சிங்களவரின் ஆதிக்கம் பெருக தமிழர் சிறுபான்மை இனத்தவராக வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது. இலங்கை வரலாற்றை எடுத்துப்பார்த்தால் சிங்களவரின் அடையாள சான்றுகள் குறைவாகவே உள்ளது. எல்லா நாடுகளை போலவே இங்கும் அந்த காலத்தில் மன்னர் ஆட்சியே ஓங்கி நிலை பெற்றிருந்தது. ஊர்களுக்கு ஊர் வெவ்வேறு மன்னர் ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்த காலம் அது. காலங்கள் போகப்போக மன்னர்களின் ஆசை பெருகி, சிறிய ஊருக்கு தலைவனாய் இருப்பதை விட பெரிய நாட்டிற்கு தலைவன் ஆகவேண்டும் என்ற பேராசையில் மன்னர்கள் மற்றைய ஊர் மன்னர்கள் மீது படையெடுத்து வெற்றியும் வீழ்ச்சியும் கண்டனர். அதன் காரணமாக சிங்கள மன்னர்கள் ஆதிக்கம் இலங்கை தீவை ஆழ கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி, அதை தொடர்ந்து ஜனநாயக ஆட்சிக்கு வித்திட்டதும் அவர்களே. காலம் கடந்து செல்ல செல்ல தமிழர்கள் உரிமை மொத்தமாக பறிக்கப்பட்டது, சட்டங்கள் அனைத்தும் சிங்களவர் சார்பாகவே எழுதப்பட்டன. நகைப்புக்கூரிய ஒரு விடயம் இலங்கை நாட்டில் ஒரு தமிழர் சனாதிபதியாக வரமுடியாது என்ற சட்டமும் பாராளமன்றத்தில் பலர் ஆமோதிக்க அமைக்கப்பட்ட சட்டம் ஒன்றே. கல்வியில் பாரபட்சம் காட்டப்பட்டது, அதாவது தமிழ் படிக்கும் ஒரு பிள்ளை உயர்கல்வி பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தாலும் சிங்கள பிள்ளைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. 



இப்படி பிரச்சனைகள் ஒன்றன் பின்னாக ஓன்று தலை தூக்க இனக்கலவரமே மூண்டது. அந்த கலவரத்தில் எத்தனையோ தமிழர்கள் கொல்லப்பட்டனர், காணமல் போனார்கள். அந்த சூழ்நிலையில் எந்தவொரு ஒரு தமிழனையும் போலீசார் காரணம் ஈன்றி 30 நாட்கள் சிறையில் அடைக்கலாம் என்ற சட்டத்தையும் அன்ற சிங்கள அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. இனி சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியாது என முடிவெடுத்த தமிழர் தனிநாடு (தமிழீழம்) கோரிக்கையை வைத்து போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தனர். செய்வதறியாத சிங்கள பேரினவாதம் தமிழர்களையும், அவர்களது போராட்டத்தையும் அழிப்பதற்காக பல நடவடிக்கைகளை தமிழர் மேல் ஏவிவிட்டது. சிறு குழுக்களாக போராடிய தமிழர் ஒன்றாக ஆயுதம் ஏந்தி பிரபாகரன் தலைமையில் இலங்கை ராணுவத்தின் மீதும், அரசாங்கத்தின் மீதும் தாக்குதல் நடத்தி வெற்றியும் கண்டு, தமிழ் பிரதேசங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழே வைத்திருந்தனர். அவர்களை  சமாளிக்க முடியாமல் சமாதான பேச்வார்த்தைகளுக்கு இணங்கி, பின்னர் பேச்சுவார்த்தை இரு சாராருக்கும் இணக்கம் இல்லாமல் தோல்வியில் முடிந்த வரலாறும் உண்டு. சுமார் 30 வருடங்கள் விடுதலை புலிகளை அழிக்க பல விதமான போராட்டங்களை அவர்கள் மேல் திணித்து சர்வதேச ஆலோசனைகளையும்,ஆயுத உபகரணங்களையும் பெற்று பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் கணிசமான தமிழர்களை கொன்று குவித்தது  இலங்கை அரசாங்கம். இறுதியில் வெற்றி கண்டு இப்பொழுது 65 ஆவது சுதந்திர நாள் இது வென்று கொண்டாட்டம் போடுகின்றது.              

     





இப்படி இலங்கை வரலாறு அமைந்திருந்தாலும், நீங்கள் ஒரு சுற்றுலா பயணியாக இலங்கை போனால் அங்கே பல சிங்கள பண்டைய கோயில்கள், இடிந்து போன மன்னர் மாளிகைகள் என்று பார்ப்பீர்கள். ஆனால் உங்களால் தமிழர் வாழ்ந்தற்கான ஒரு சிறு சான்றுகளை கூட பார்க்க முடியாது. அத்தனை பண்டைய தமிழர் பெருமைகள் திட்டமிட்டு சிங்களவர்களால் அழிக்கப்பட்டு உள்ளது. இன்றுவரை அந்த நடவடிக்கைகள் சிங்கள ஜனநாய அரசால் முன்னெடுக்கப்படுகின்றன. உதாரணமாக தமிழர்களை தங்களது ஜனநாய சட்ட ஆதிக்கத்தின் பெயரில் தமிழர் இனத்தை கொன்று குவித்தது, தமிழர் உரிமைக்காக போராடிய தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை பல சர்வதேச நாடுகள் உதவியோடு வீழ்த்தியது, ஆசியாவிலேயே பிரசித்தி பெற்ற பண்டைய வரலாற்று நுல்களை கொண்ட யாழ் நுலகத்தை திட்டமிட்டு எரித்தது, தமிழர் வாழும் முக்கிய பிரதேசங்களில் சிங்களவர்களை அடாவடியாக குடி அமர்த்துவது, தமிழர் கோயில்களை சிறுக சிறுக அடையாளமே இல்லாமல் அழிப்பதன் மூலம் அவர்களது தனித்துவம் மிக்க பண்பாட்டையும், கலாச்சாரத்தியும் சீர் குலைப்பது போன்ற செயற்பாடுகள் இன்றுவரை இரகசியமாக உலக பார்வைக்கு படாமல் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.



அவ்வாறு ஒருபுறம் தமிழர்கள் அழிவு  நோக்கியதாக இருந்தாலும் பெரும்பான்மையான சிங்களவர்கள் 55% ஆனவர்கள் அடிப்படை வசதிகள் ஈன்றி, பொருளாதார முன்னேற்றங்கள் ஈன்றி வறிய நிலையில் வாழ்பவர்கள் உண்டு. போரை முடித்த பிற்பாடும் நாட்டின் வளர்ச்சி இன்னும் அடிமட்டத்திலேயே காணப்படுகின்றது. லெட்ச்சமோ லெட்சம் உயிர்கள் அந்த பூமியில் புதையுண்டு, இரத்தமும், சதையுமாய் கறைபட்டிருக்கும் அந்த மண்ணில் இன்னுமொரு தீர்வு கூட வழங்கப்படாது வாழும் தமிழரின் நிலை இப்படி இருக்க, ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு எப்படி சுதந்திரம் கிடைத்ததாக உணரமுடியும். 


நன்றி                         

No comments :

Post a Comment