e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

விசம் குடித்த தத்துவ மாமேதை

No comments
மனித சமுதாயத்தின் சிந்தனை திறனை நுணுக்கமாக கூர்மைப்படுத்தி, மனிதனை மேம்படுத்தி சிறந்த வாழ்க்கை முறைக்கு வழி காட்டியது தத்துவமே. அந்த தத்துவ வாதங்களை தாங்க முடியாமல் சாக்கிரட்டீஸ் என்கின்ற தத்துவ மேதைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை யாரால் மறக்க முடியும்.   

உலகமே இன்றுவரை மறக்காமல் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டும் மாபெரும் மாமேதை சாக்கிரட்டீஸுக்கு மரண தண்டனை விதித்தது ஒரு ஜனநாயக ஆட்சி என்பது சாமானியர்கள் பலருக்கு தெரியாத உண்மை.

உலகுக்கே ஜனநாயக அமைப்பை தந்த ஏத்தன்ஸ், அந்த தத்துவ ஞானிக்கு கடைசியில் விசம் தந்தது மிகவும் நெருடளுடனான சோகம். ஆனால் அப்படி நேர்ந்ததற்கு பின்னணி உண்டு.
                                                                   இத்தாலிய மண் மீது வளர்ந்து, நிமிர்ந்த நாடுகளில் ஏத்தன்ஸும், ஸ்பாட்டாவும் முக்கியமானவை. ஏத்தன்ஸ் ஜனநாயக அமைப்பை பின் பற்றி வர, ஸ்பாட்டாவில் ஏறக்குறைய இராணுவ ஆட்சி நடைபெற்றதாக சொல்லலாம். இரண்டுமே சற்று வீம்பு பிடித்த ராட்ச்சியங்களாக, எலியும் பூனையுமாக இருந்து வந்தன. பல விதமான கருத்து வேறுபாடுகள் காரணமாக இரு நாடுகளுக்குமிடையே சிறு சிறு மோதல்களில் தொடக்கி கி.மு 431 யில் ஏத்தன்ஸ்ஸும், ஸ்பாட்டாவும் முழுமையான யுத்தத்தில் இறங்கின. உலக போர்களில் 27 ஆண்டுகள் தொடர்ந்த முக்கியமான நீண்டதொரு யுத்தம் அது. ஜனநாயகம் என்றாலும் ஏத்தன்ஸ் மக்கள் வீரத்தில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. ஸ்பாட்டாவில் இராணுவத்திற்கு இன்னும் அதிக மதிப்பும் வசதிகளும் இருந்தன. எப்பவுமே போர் முஸ்த்தீபுகளில் உளலும் அதிரடியான நாடு ஸ்பாட்டா. கி.மு 404 யில் அந்த நீண்ட யுத்தம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஸ்பாட்டாவிடம் எத்தன்ஸ் மண்டியிட வேண்டி வந்தது. போர் முடிவதற்கு முன்பு எத்தன்ஸில் திடீர் என்று பிளேக் நோய் பரவி ஏராளமானவர்கள் இறந்ததால் அந்த நாடு சற்று துவண்டு போனது ஒரு காரணம். தோல்வியை தொடர்ந்து எத்தன்ஸில் புரட்சி வெடித்தது. அரச குடும்பத்தை சேர்ந்தவர்களும், செல்வந்தர்களும், பிரபுக்களும் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினார்கள். 30 பேர் ஆட்சி என்று வரலாறு அதற்கு பெயர் சூட்டியுள்ளது. தோற்றுப்போன ராட்ச்சியத்தை சீர்படுத்த கண்டிப்பான, எதேற்ச்சியான ஆட்சி தேவை என்று முடிவு கட்டியதால் எத்தன்ஸில் ஜனநாயகம் சற்று ஒதுங்கி நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆனது. 

என்னதான் இருந்தாலும் ஜனநாயகத்தின் தாயகம் அல்லவா? பிறகு மீண்டும் அந்த உணர்வு தலை தூக்க 30 பேர் ஆட்சி அப்புறப்படுத்தப்பட்டு புதிய ஆட்சியை எத்தன்ஸ் மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். முந்தைய ஆட்சியின் ஆதரவாளர்கள் எல்லோரும் புதிய ஆட்சியில் பிரட்சனைக்கு உள்ளானார்கள். அவர்களில் ஒருவர் தான் சாக்கிரட்டீஸ். அந்த மேதையின் வழிக்கு வராத சுதந்திர உணர்வு ஆட்சியாளர்களில் பலருக்கு எரிச்சலை தந்து வந்தது. ஆட்சி மாறினாலும் சாக்கிரட்டீஸ் சாக்கிரட்டீஸாகவே இருந்தார் என்பது உண்மை. ஆட்சிக்கு வாழ்க கோசம் போடவில்லை அந்த தத்துவ தாத்தா. எனவே அவரை வழிக்கு கொண்டுவர திட்டம் போட்டு குற்றப்பட்டியலை ஆட்சியாளர்கள் தயாரித்தார்கள். சாக்கிரட்டீஸ் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கின் முடிவில் நீதிமன்றம் சொன்ன தண்டனை மரண தண்டனை. 



சற்றும் அழகு இல்லாமல், சப்பை மூக்கு, வழுக்கை தலை, துருத்திக்கொண்டிருக்கும் தொப்பை, முட்டை விழிகளோடு தோற்றமளித்த சாக்கிரட்டீஸ் பிறந்தது கி.மு 469 ஆம் ஆண்டு. அப்பா சாதாரண சிற்பி, அம்மா மகப்பேரு மருத்துவர். பிற்பாடு சாக்கிரட்டீஸ் நண்பர்களிடம்: நான் என் அம்மாவின் பணியைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றேன். உங்களுக்குள் இருக்கின்ற அறிவு என்னும் குழந்தையை பிரசவம் பார்த்து உங்களிடம் தருவது தானே நான் செய்கின்ற வேலை என்று தமாசாக சொல்லுவது உண்டு. சாக்கிரட்டீஸ் தந்தையை பின்பற்றி சில ஆண்டுகள் சிற்ப கலையில் ஈடுபட்டது உண்டு. பின்பு எத்தன்ஸ் போர்களில் ஈடுபட்ட போது அதில் முன்வந்து வீரத்துடன் பங்கேற்று தளபதிகளிடம் பாராட்டும் பெற்றார். அதேல்லாம் முடிந்த பிறகு சாக்கிரட்டீஸ் செய்தது ஓன்று மட்டுமே. பேச்சு, தன் வாழ் நாள் முழுவதும் சிந்தனை பேச்சு என்று கழித்தவர் சாக்கிரட்டீஸ். காலில் செருப்பு இல்லாமல், கிழிந்த உடையோடும், முரட்டு தாடியோடும் அவர் அதிகாலையிலேயே எத்தன்ஸ் வீதிகளில் வாக்கிங் போக ஆரம்பித்துவிடுவார். அவர் நடக்க நடக்க கூட்டம் சூலும். எத்தன்ஸ் நகரமே அந்த மேதையின் கருத்துக்களை கேட்க துடித்தது. குறிப்பாக இளைஞர்கள். ஏழை, பணக்காரர் என்கின்ற வேறுபாடுகள் இல்லாமல் அந்த நாட்டு இளைஞர்கள் சாக்கிரட்டீசை சூழ்ந்து கொண்டார்கள். சிறந்த மனிதனாக எப்படி ஆவது என்பது இளைஞர்களுக்கு சுருக்கமாக கேள்விகள் மூலம் சொல்லிக்கொடுத்த பாடம். 

அதோடு தானும் மிகச்சிறந்த மனிதனாக கடைசி மூச்சு வரை வாழ்ந்தார் அவர். ஒரு முறை புகழ் பெற்ற டெல்பி ஆலயத்திற்கு முன் கூடிய மக்கள், எத்தன்ஸ் நாட்டின் மிகச்சிறந்த அறிவாளி யார்? என்ற கேள்வியை முன் வைத்தனர். கோயிலின் உள்ளே இருந்து சாக்கிரட்டீஸ் என்று ஆசாரியின் குரல் முழங்கியது. மகிழ்ச்சியோடு ஓடிய இளைஞர்கள் ஊர்க்கோடியில் ஒரு லாயத்தில் குதிரைக்கு லாடம் தயாரித்துக்கொண்டிருந்த சாக்கிரட்டீஸிடம் ஆசாரி சொன்னதை தெரிவித்தார்கள். புன்னகை புரிந்த சாக்கிரட்டீஸ்: அப்படியா நான் ஒரு முட்டாள் என்பது எனக்கு தெரியும், அந்த அறிவு எத்தன்ஸில் எனக்கு மட்டும் இருப்பதால் ஆசாரி அப்படி சொல்லிருக்கலாம் என்று விளக்கினார். இந்த ஜினியஸ்க்கு எத்தன்ஸ் நாட்டில் பெருகி வந்த செல்வாக்கிற்கு ஆட்சியாளர்களுக்கு கவலை ஏற்படுத்தியது. சாக்கிரட்டீஸின் அகம்பாவத்தை அடக்க நல்லதொரு சந்தர்ப்பத்திற்காக அவர்கள் காத்திருந்தார்கள்.


உலக வரலாற்றில் சாகா வரம் பெற்ற மிகப்பிரபலமான வழக்கு ஒன்றை சூட்டிக்காட்ட வேண்டுமென்றால், அது 2400 ஆண்டுகளுக்கு முன் எத்தன்ஸ் நீதிமன்றத்தில் நடந்த சாக்கிரட்டீஸ் வழக்குத்தான். அந்த வழக்கு பற்றி விபரங்கள் அனைத்தையும் நாம் படித்து தெரிந்து கொள்ளமுடியும். அதற்கு குறிப்பாக நன்றி சொல்ல வேண்டிய மனிதர் பிளேட்டோ. சாக்கிரட்டீஸின் பிரதான சீடர்களில் ஒருவர். வழக்கில் நடந்த வாத பிரதிவாதங்களை துல்லியமாக உடனடியாக எழுதி வைத்தார் பிளேட்டோ. வழக்கு நடந்த போது அரசு தரப்பில் சாக்கிரட்டீஸுக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்யப்பட்டதால் பிளேட்டோ கவலை அடைந்தார். உண்மைகள் உலகிற்கு தெரிய வேண்டும் என்று நினைத்த அவர் தேர்ந்த நிருபராக மாறினார். வழக்கு நடந்த போது பிளேட்டோவிற்கு வயது 28. சாக்கிரட்டீஸின் மாணவனாக சேர்ந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்டதால் பிளேட்டோவும் ஒரு தனிப்பெரும் தத்துவ மேதையாக உருவாகிக்கொண்டிருந்த காலகட்டம் அது. வழக்கின் போது நீதிமன்றத்தில் கடைசி வரை அமர்ந்து துல்லியமாக பிளேட்டோ நோட்ஸ் எடுத்ததால் தான் நம்மால் இன்றளவும் சாக்கிரட்டீஸின் உலக புகழ் பெற்ற வாதங்களை நேரில் கேட்கும் உணர்வை பெறமுடிகின்றது. சாக்கிரட்டீஸின் மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் நாத்திகவாதம், இளைஞர்கள் மனதை களங்கப்படுத்தியது, இது தவிர எத்தன்ஸின் ஜனநாயக ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்ய மக்களை தூண்டியதாகவும் அந்த தத்துவ ஞானி மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. உண்மையில் அந்த வழக்கு மூலம் சாக்கிரட்டீசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் எண்ணம் அல்ல. சாக்கிரட்டீஸ்சை வழிக்கு கொண்டுவந்து ஆழும் கட்சியை அவர் வழிமொழிய வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம் என்று கூறப்படுகின்றது. 

சீர்தூக்கிப்பார்த்து முடிவு கட்டும் அறிவாற்றல் இல்லாதவர்கள் ஆட்சி செய்ய லாயக்கற்றவர்கள் என்பது இளைஞர்களுக்கு சாக்கிரட்டீஸ் போதித்த விடயங்களில் ஒன்றாக இருந்தது. இந்த போதனைகளால் எத்தன்ஸ் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது ஒரு இளக்காரம் ஏற்றப்பட்டு விடும் என்று பதவியாளர்கள் பதறினார்கள். சாக்கிரட்டிசுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் மக்கள் முன்னிலையில் அவர் புகழ் பல மடங்கு அதிகமாகும் என்பதும், பிறகு பதவியில் இருப்பவர்களை எத்தன்ஸ் இளைஞர்கள் மிகவும் கேவலமாக பார்ப்பார்கள் என்பதும் ஆட்சியாளர்களுக்கு தெரியாததல்ல.  தங்கள் மிரட்டல்களுக்கு சாக்கிரட்டீஸ் பணிவார் என்று எதிர் பார்த்தது நடக்கவில்லை என்பதுதான் ஆட்சியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே எத்தன்சை விட்டு சாக்கிரட்டீஸ் வெளியேறியிருந்தால் நீதிமன்றம் அவரை சும்மா விட்டிருக்கும் , அல்லது நீதிமன்றத்தில் சாக்கிரட்டீஸ் சம்பிரதாயகமாக மன்னிப்பு கேட்டு இருந்தாலும் அவரை மன்னித்து எச்சரித்து விடுதலை செய்திருப்பார்கள். ஒரு அடையாள ரீதிரியில் சிறு அபராதம் செலுத்தினால் கூட போதுமானது என்று நைசாக சொல்லிப்பார்த்தார்கள். சாக்கிரட்டீஸ் இந்த எதற்குமே உடன் படாமல் ஆட்சியாளர்கள் வயிற்றில் கிலி ஏற்ப்படுத்தினார். தன்னை பொறுத்த மட்டில் அபராத தொகைகள் கட்டுவது குற்றத்தை ஒப்புக்கொள்வது ஆகும் என்றார் சாக்கிரட்டீஸ். தப்பித்து வெளிநாடு ஓடுவதும் தவறான செயல் காரணம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆட்சிக்குமிடையே சமூகரீதியான ஒப்பந்தம் உண்டு. அந்த அந்த நாட்டின் சட்டத்தை அந்த அந்த நாட்டு குடிமகன் மதிக்க வேண்டும். அதை மீறுவது சமுதாய வாழ்கையின் அஸ்திவாரத்தை தகர்ப்பது போல என்றார் அந்த தத்துவ ஞானி. 

மனித சமுதாயத்திற்கு எது நல்லது என்பதை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அதற்கு அறிவு தேவை, அறிவுதான் சிறப்பான மனிதனாக வாழ வகை செய்யும். எத்தன்ஸ் இளைஞர்கள் சிறந்து வாழ வேண்டும் என்பதுதான் என் நோக்கம். அதற்கான உதவியை அவர்களுக்கு செய்வது என் கடமையாக கருதுகின்றேன். அந்த கடமை உணர்வு எனக்கு இறைவன் தந்த வரம். எனக்கு இந்த நீதிமன்றம் தண்டனை தருவது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் என்னை உங்களுக்கு தந்த இறைவனுக்கு எதிரான தீர்ப்பாகிவிடும். ஆம் உங்களுக்காக இறைவன் அனுப்பிய வண்டு நான். நிர்வாகம் என்கின்ற ராஜ கம்பீரமான குதிரை, சோம்பலாக, தோய்வாக இருக்கும் தருணங்களில் அதை சுறுக்கென்று குத்தி எழுப்பி துடிப்போடு நடமாட வைக்கும் வண்டு. நான் போனால் இன்னொரு சாக்கிரட்டீஸ் கிடைக்கமாட்டான் என்பதை சற்று எண்ணி பார்த்துவிட்டு தீர்ப்பை வழங்குங்கள் என்பதே சாக்கிரட்டீஸின் முத்தாய்ப்பான வாதம். நீதிமன்றத்தில் அந்த குற்றவாளி கூண்டில் அந்த தத்துவ மேதை லேசான புன்னகையுடன் கம்பீரமாக நிற்க விசம் குடித்து சாக்கிரட்டீஸ் இறக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

எத்தேன்ஸ் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவுடன் சாக்கிரட்டீஸ் மெல்லிய புன்னைகையுடன் சொன்னார்: இறைவன் கருவியாக செயல் பட்டு எத்தேன்ஸ் மக்களுக்கு என் மனதில் பட்ட உண்மைகளை எடுத்து சொன்னேன். அது என் கடமையாக போய் விட்டது. அதில் இருந்து நான் நழுவ முடியாது. கடைசி மூச்சு வரை நான் என் மக்களுக்கு சொல்வது இது தான். பணம், பதவி, பகட்டு போன்ற தற்காலிக மகிழ்சிகளில் உங்களை இளக்காதீர்கள். உங்கள் ஆன்மாவை மேம்படுத்துவது அறிவும், ஆன்மாவும் தான். இதோ சாக்கிரட்டிசை மரணம் அழைக்கின்றது.மரணம் என்றால் என்ன எனக்கு தெரியாது. அது மிகச்சிறந்த ஒன்றாக கூட இருக்கக்கூடும்.ஆனால் உயிரோடு இருக்கும் போது மனசாட்சியை மதிக்காமல், உண்மைக்கு போராடாமல் இருப்பது மோசமானது என்பது மட்டும் எனக்கு தெரியும். என் முடிவிற்கான நேரம் வந்து விட்டது,  நான் இறக்க செல்கின்றேன் நீங்கள் வாழ.  இரண்டில் எது சிறந்தது எது என்பது யாருக்கு தெரியும் கடவுளை தவிர

அப்போது எத்தேன்ஸில் திருவிழா நடந்து கொண்டிருந்ததால் மரண தண்டனை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. சிறையில் சாக்கிரட்டீசை சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்தார்கள். மாலை நேரங்களில் அவரை பார்க நண்பர்களையும், உறவினர்களையும் அனுமதித்தார்கள். ஒரு நண்பர் சாக்கிரட்டீசுக்காக நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த பணத்துடன் வந்து அனுமதி கேட்டபோதும், கிரிட்டோ என்கின்ற சீடர் சாக்கிரட்டீஸ் வெளிநாடு தப்பித்துச்செல்ல படகு ஓன்று துறைமுகத்தில் தயாராக இருப்பதாக சொன்ன போதும் சாக்கிரட்டீஸ் அவைகளை மறுத்து அவர்களை அமைதிப்படுத்தினார். பிளேட்டோவின் கிரேட் டயோலோக்ஸ்  புத்தகத்தில் கிரிட்டோ என்கின்ற அத்தியாயத்தில் சாக்கிரட்டிஸ் கடைசி நாட்கள் உணர்ச்சி புர்பமாக விபரிக்கப்படுகின்றது. இறக்க போகும் நாள் நெருங்கி விட்டதால் சாக்கிரட்டீஸ் நேரத்தை வீணாக்காமல் நண்பர்களோடு தத்துவ விளக்கங்களில் ஈடுபட்டார். இறப்பு, ஆன்மா, வலி, இன்பம், துன்பம் என்பவை பற்றியே பேச்சு சுற்றிச் சுற்றியே வந்தது.    

கடைசி நாள் அவரது பிரதான சீடர்கள் உள்ளே நுழைந்த போது, சிறையின் உள்ளே இருந்த சாக்கிரிட்டீஸின் மனைவி சாண்டிவி தங்களுடைய கடைசி மகனுடன் இருந்தார். நண்பர்களை பார்த்தவுடன் சாண்டிவி கணவரை பார்த்து: அய்யோ கடைசி முறையாக உங்களோடு நண்பர்கள் பேச வந்திருக்கின்றார்களே என்று சொல்லி கதறி அழ லேசாக முகம் சுழித்த சாக்கிரட்டீஸ்.  கிரிட்டோ தயவுசெய்து யாரையாவது துணைக்கு அனுப்பி என் மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்றார். சற்று நேரத்திற்கு முன்னர் தான் அவரை பிணைத்து இருந்த சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டதால், தன் கால்களை தேய்த்துக்கொண்டு சற்று சௌவுகரியமாக மேடையில் அமர்ந்த அந்த தத்துவ ஞானி தொடர்ந்து ஆன்மாவிற்கு மரணம் உண்டா,  மறு பிறவி இருக்கின்றதா போன்ற விவாதங்களில் ஈடுபட்டார். இடிந்து போய் அமர்ந்து இருந்த சீடர்கள் சாக்கிரட்டீஸிடம்  நுணுக்கமாக கேள்விகள் கேட்கமுடியாமல் தவித்தார்கள். மாலை நேரம் நெருங்கியவுடம் சாக்கிரட்டீஸ் சற்று நேரம் எடுத்துக்கொண்டு தூய்மையாக குளித்துவிட்டு மீண்டும் நண்பர்களிடம் திரும்பினார். 



நிகழவிருக்கும் கொடுமையை பார்க்க சகியாமல் சூரியன் மேற்கே மறைய தொடங்கினான். சிறை அதிகாரி உள்ளே நுழைந்து: என்னை மன்னித்து விடுங்கள் சாக்கிரட்டீஸ். என் கடமையை செய்ய வேண்டியிருக்கின்றது. இந்த சிறைக்குள் எத்தனையோ கைதிகளை பார்த்திருக்கின்றேன். உங்களை விட சிறந்த மனிதரை சந்தித்தது இல்லை என்பது மட்டுமே என்னால் சொல்ல முடிகின்றது. என்னால்.... பேச முடியவில்லை, என் மீது உங்களுக்கு கோபம் இல்லையே. முடிக்க முடியாமல் அந்த அதிகாரி குரல் உடைந்து அழ. எழுந்து சென்று அவரை சமாதானப்படுத்திய சாக்கிரட்டீஸ்: விசம் தயாராக இருக்கின்றதா என்று கேட்டார். சீடர் கிரிட்டோ கண்களில் நீர் வழிய: அவசரம் இல்லை சாக்கிரட்டீஸ், முழுசாக அஸ்தமனம் கூட ஆகவில்லை. சட்டப்படி நள்ளிரவு வரை நேரம் எடுத்துக்கொள்ளலாம் என்றார் பதட்டத்துடன் . அவரை நிமிர்ந்து பார்த்த சாக்கிரட்டீஸ் : நான் கடைசி வரை உயிரை ஆர்வத்துடன் பாதுகாத்துக்கொண்டதை வரலாறு பதிவு செய்ய வேண்டுமா கிரிட்டோ. அது சற்று முட்டாள் தனமாக தோற்றம் அளிக்காதா? என்று சொல்லி விட்டு விச கோப்பையை உடனே எடுத்து வர சொல்லி அனுப்பினார்.   கலங்கிய கண்களுடன் காவலாளி கோப்பையை நீட்ட அதை கையில் ஏந்திய சாக்கிரட்டீஸ் : விசத்தை அருந்திய பிறகு அது முறையாக வேலை செய்ய நான் ஏதாவது செய்ய வேண்டுமா? என்று காவலாளியிடம் கேட்டார். விசத்தை குடித்து விட்டு நீங்கள் முன்னும் பின்னும் சற்று நடக்கலாம். உங்கள் கால்கள் முதலில் மறத்து போகும், பிறகு படிப்படியா உடல் முழுவது பரவும். என்று காவலாளி சொல்லி முடிப்பதற்குள் ஒரே மூச்சில் விசத்தை குடித்தார் அந்த மேதை . அது வரை சோகத்தை அடக்கி கொண்டிருத்த சீடர்கள் ஓ..... என்று கதற ஆரம்பித்தார்கள். என்ன இது இப்படி அழுது புலம்பியதற்காகத்தானே என் மனைவியை  வீட்டிற்கு அனுப்பினேன். பெண்களை போல நீங்களும் அழுதால் எப்படி. மரணத்தின் போது அமைதி நிலவினால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று கடிந்து கொண்டார் சாக்கிரட்டீஸ். மெல்ல அவரது கால்கள் தள்ளாடின, மேடையில் படுத்துக்கொண்ட சில நிமிடங்கள் கழித்து. சாக்கிரட்டீஸின் அருகில் சென்று அவர் கால்களை மெல்ல கிள்ளியவாறு வலி தெரிகின்றதா? என்று காவலாளி மென்மையாக கேட்க இல்லை என்று தலையை அசைத்த சாக்கிரட்டீஸ். மெல்லிய குரலில் கிரிட்டோ  எல்லை தெய்வத்திற்கு கோழி ஒன்றை காணிக்கை செய்வதாக சொல்லிருந்தேன் அதை நிறைவேற்றிவிடுங்கள் என்றார். சரி சாக்கிரட்டீஸ். வேறு ஏதாவது எங்களுக்கு சொல்ல விரும்புகின்றீர்களா? என்று கிரிட்டோ கேட்க, பதில் இல்லை. சாக்கிரட்டீஸின் கண்கள் நிலைகுத்திருந்தன. 



பிளேட்டோ தன் புத்தகத்தில் முடிவுரையாக இவ்வாறு எழுதுகின்றார். இப்படியாக நாங்கள் தந்தையாக வழிபட்ட, எங்களை நண்பர்களாக வழிநடத்திய மிகச்சிறந்த அறிவாளி எங்களை எல்லாம் விட்டு சென்றார். உண்மைக்காக நேர்மையாக போராடிய மாபெரும் மனிதரின் முடிவு அந்த மாலை நேரத்தில் நிகழ்ந்தது. சாக்கிரட்டீஸ் இறந்து அவர் உடல் புதைக்கப்பட்டதை தொடர்ந்து எத்தேன்ஸ் களை இழந்து போனது. நடந்த தவறை உணர்ந்து  எத்தேன்ஸ் மக்கள் சாக்கிரட்டீஸ் பெருமைகளை சொல்லிச் சொல்லி மாய்ந்தார்கள். சாக்கிரட்டீஸ் இறக்க காரணமாக இருந்தவர்களை நாடே புறக்கணித்தது. அவர்களில் சிலர் குற்ற உணர்வுகளில் தற்கொலை செய்துகொண்டார்கள். பிற்பாடு ஊர் மக்கள் பணம் வசூலித்து எத்தேன்ஸில் அச் சமயம் புகழ் பெற்று விளங்கிய லிசிபஸ் என்கின்ற சிப்பியை கொண்டு சாக்கிரட்டீஸின் சிலையை வடித்து நகர மையத்தில் நிறுத்தினார்கள்.

                    
உணர்வு பூர்வமான சாக்கிரிட்டீஸ் சரித்திரத்தை கி.மு கி.பி என்கின்ற புத்தகத்தில் படித்து, பிடித்து போய் இந்த பதிவை இடுகின்றேன்.


நன்றி  

No comments :

Post a Comment