e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

தொடர் தமிழக மாணவர்கள் எழுச்சி

2 comments
என்றுமே தமிழகத்திற்கும் ஈழத்திற்குமான உறவு தொப்புள்கொடி உறவாக உயிர்ப்புடன் நிலைத்து நீடிக்கின்றது. தமிழர்கள் அல்லாத சில சுயநல ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்ட விடுதலை உணர்வு இப்போது (எப்போதும்) தமிழக மக்களின் உள்ளங்களில் பொங்கி வீறுநடை போடுகின்றது.  இந்த உணர்வு முத்துக்குமார் மூட்டிய தீயின் தணல். அதன் உண்மை வெப்பம் தமிழர் சமுதாயத்தின் உள்ளங்களை சுட்டெரிக்க தமிழகம் எங்கும் உருவானது விடுதலை தீப்பொறி.


ஈழ விடுதலை வரலாற்றிலே எத்தனையோ எழுச்சி மிக்க போராட்டங்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடந்தேறியுள்ளது.அப்படி என்றும் இல்லாதவாறு தமிழக மாணவர்கள் தமிழ் ஈழத்திற்கான சுதந்திர விடுதலைக்கு ஆதரவாகவும்,ஈழத்தில் நடந்த இறுதி போரில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை கோரியும் எழுச்சிகரமாக கட்டுக்கோப்புடன் உண்ணாநிலை போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.இனம், மொழி பாராது சகல மாணவர்களும் அரசியல் தலை ஈடுகள் எதுவும் இல்லாமல் தூய விடுதலை உணர்வோடு கலந்து கொள்ளகின்றனர். இலயோல சட்ட கல்லுரி மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழத்திற்கு ஆதரவான உண்ணா நிலை போராட்டம் தற்போது மற்றைய தமிழக மாவட்ட கல்லூரிகளில் போராட்டத்திற்கான துண்டுதலை ஏற்படுத்தி உள்ளது. ஈழத்தில் நடந்த அவலங்களை பார்த்து பொறுக்க முடியாமல் தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட அடையார் அம்பேத்கர்  சட்ட கல்லூரி மாணவி மாசாணி சாகும் வரை உண்ணா நிலைப்போராட்டத்தில் குதித்துள்ளார். இவரின் மனித நேயத்தை தமிழர்கள் யாவரும் மதிக்க வேண்டும்.


மாணவர்கள் புரட்சி குறித்த சில இடங்களில் மட்டும் அல்லாது தமிழகம் எங்கும் உணர்வோடு பரவுகின்றது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் 65 மாணவர்கள் தொடர்ந்து நான்காவது நாட்களாக உண்ணா நிலைப்போராட்டத்தில் துணிவோடு ஈடுபடுகின்றனர். மேலும் 13 மாணவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சில மாணவர்கள் மருத்துவமனையில் இருந்து திரும்பி மீண்டும்  உண்ணா நிலைப்போராட்டத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் போராட்ட குணத்தை பார்த்த 65 வயது நிரம்பிய மனோரஞ்சிதம் எனும் பெண்மணி தற்போது மாணவர்களோடு இணைந்து போராட்டத்தில் குதித்துள்ளார்.


தொடர்ந்து மதுரை சட்டக்கல்லுரியை சேர்ந்த மாணவர்கள், மதுரை அனைத்து கல்லுரி மாணவர்கள் பேரவையுடன் இணைந்து ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையை கண்டித்து மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு பட்ட கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி தல்லாகுளத்தை நெருங்கிய போது அங்கு பறக்கவிடப்பட்ட காங்கிரஸ் கொடியை கம்பத்தில் ஏறி கிழித்து வீசினர். தொடர்ந்து மதுரை தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு இழுத்து மூடி, இலங்கை தேசிய கொடியையும் எரித்தனர்.

   
நேற்றய தினம் திருச்சி சட்டக்கல்லுரி மாணவர்களும், ஈ வே ரா கல்லுரி மாணவர்களும் திருச்சி தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஐ.நா மன்றம் உடன் நடாத்த மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும். வாக்கெடுப்பு நடாத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று முழக்கமிட்டனர்.

  
இப்படி தொடர்ச்சியாக மாணவர்கள் சக்தி விஸ்வரூபம் எடுத்துள்ளது காலத்தின் கட்டாயம். தமிழகம் முழுவதும் புரட்சி ஏற்படுத்தி அனைத்து கல்லுரி மாணவர்களின் உண்ணா நிலை போராட்டத்திற்கும், மறியல் போராட்டத்திலும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்பது தமிழீழ விடுதலைக்கு போராடும் மாணவர்களின் அன்பான வேண்டுகோளாக உள்ளது. இந்த போராட்டம் தமிழீழத்திற்கு மட்டும் ஆனது அல்ல தமிழக சரித்திரத்தை மாற்றக்கூடிய வல்லமை கொண்ட இளம் இரத்தங்களின் சுதந்திர குரல்.  ஈழத்திற்கு ஆதரவான தமிழக ஆதரவாளர்களை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம், ஈழத்திற்காக போராடியவர்களை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் கொண்ட இலட்சிய கொள்கையை மட்டும் யாருக்கும் பிடிக்காமல் இருக்கவே முடியாது. நீ நடந்து செல்லும் பாதையில் முற்கள் அதிகம் இருந்தால் நீ போகும் வழி சரியானது, நீ செல்லும் பாதையில் இடர்கள் இல்லை என்றால் உனக்கு முன்னால் அந்த வழியில் வேறு சிலர் சென்று இருக்கின்றார்கள்.

மாணவர்கள் போராட்ட களம் வீரியம் அடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு உத்வேகமும்,ஒத்துழைப்பையும் வழங்குவது தமிழனாக நமது கடமை.   வெறுமனே சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளை இடாமல் உச்ச நிலையில் உள்ள மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து முக்கிய பதிவுகளை அடிக்கடி பதிவிடுமாறு பதிவாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். ஒருநாள் மாணவர் போராட்டம் வெற்றி பெரும், எங்கள் கனவும் நிஜமாகும்.   அதுவரை விடுதலை  போராட்டம் தொடரும்.

முன்னைய பதிவு : விசம் குடித்த தத்துவ மாமேதை

நன்றி           

2 comments :

  1. முள்ளி வாய்க்கால் படுகொலைகளின்போது இந்த மாணவர்கள் எங்கே போயிருந்தார்கள்?

    ReplyDelete
  2. அன்றைய தமிழக அரசியல் துரோகத்தில் மாணவர்களின் உணர்வு ஒடுக்கப்பட்டு விட்டது. இப்போது அவைகளுக்கு இடமே இல்லை. : பழனி. கந்தசாமி

    ReplyDelete