e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

அதிரடி புரட்சி மன்னன் (கி.மு கி.பி)

No comments
மதன் அவர்களால் எழுதப்பட்ட கி.மு கி.பி என்ற முகநூலில் சில பக்கங்களில் இருந்து பண்டைய நாகரீக சரித்திரங்களை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை படித்ததில் இருந்து வாசகர்களுக்கு பகிர வேண்டும் என்ற தூண்டுதலில் புரட்சி மன்னன் ஆமன் கோடப் என்ற எகிப்திய மன்னனை பற்றிய பதிவை இடுகின்றேன். 

என்ன நேர்ந்தாலும் சரி, என் மனதில் உண்மை என்று பட்டதை சொல்லியே தீருவேன் என்று பிடிவாதமாக வாழ்பவர்கள் பல சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கின்றது. சூரியன் மையத்தில் இருக்க பூமி அதை சுற்றி வரும் கிரகம் என்றார் கலிலியோ. அப்படி சொல்லி பூமியின் மதிப்பையும், புனிதத்தையும் குறைத்ததற்காக போப் ஆண்டவரின் காலடியில் கலிலியோ மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டி வந்தது.



 அதே சூரியன் தான் 4வது ஆமன் கோடப் என்கின்ற எகிப்திய மன்னரின் மூளைக்குள் தன் சூரிய ஒளிக்கதிர்களை செலுத்தி அந்த மன்னரை அடியோடு மாற்றி எகிப்திய சாம்பிரஜியத்திற்கே பெரும் பிரச்சனை ஏற்பட வழிவகுத்தது.  

கி.மு 1380 தில் 4வது ஆமன் கோடப் எகிப்திய சாம்பிரஜியத்தின் அரியணையில் அமர்ந்த போது அவருக்கு டீன் ஏஜ் (Teen Age) கூட துவங்கவில்லை. பிறகு 16 ஆண்டுகளுக்கு ஆமன் கோடப் ஆட்சி நீடித்தது. சிலர் 20 ஆண்டுகள் என்கின்றார்கள். குறுகிய காலமே ஆண்டாலும் இன்றளவும் உலக சரித்திரத்தில் ஆச்சரியக்குறியாகவே இருந்து வருகின்றார் அந்த மன்னன். பண்டைய எகிப்திய நாகரீகத்தில் எந்த பொருளுக்கவது எப்போதாவது பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் கடவுள்களுக்கு மட்டும் அங்கு பஞ்சமே இருந்தது இல்லை. சும்மா இல்லை எகிப்தியர்கள் வணங்கிய கடவுள்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது. நாய், ஆடு, பூனை,பாம்பு கடவுள்கள் எல்லாம் உண்டு. எல்லாக் கடவுள்களுக்கும் தலைமை கடவுள் இருந்தார். அந்த கடவுளின் பெயர் ஆமன். ஆட்டு கெடா முகம், மனித உடலுடன் தோற்றமளித்த ஆமனை மக்கள் பரவசத்துடன் வணங்கி வழிபட்டார்கள். ஆமனுக்காக பிரமாண்டமான திருவிழாக்கள் கோலாகலமாக நடந்தன. மன்னரின் பெயரே ஆமன் கோடப். அதாவது தலைமை கடவுளான ஆமானுக்கு திருப்திப்படுத்துகின்றவர் என்று பொருள். ஆனால் ஆமனிடம் இளம் மன்னர் ஆமன் கோடப்பிற்கு திருப்தி ஏற்படவில்லை என்பதுதான் தர்ம சங்கடமான உண்மை.

சிறுவனாக இருந்த போதே ஆமனை ஒளி வீசும் கதிரவன் அதிகமாக கவர்ந்தது. உலகில் உள்ள அத்தனை உயிர்களையும் இயக்குவது சூரியனின் சக்திதான் என்பதை பன்னிரண்டு வயதிற்குள்ளேயே புரிந்து கொண்டார் அந்த மன்னர். கூடவே நெடுங்காலமாக எகிப்தியர்கள் வணங்கி வந்த அத்தனை கடவுள்கள் மீதும் அவருக்கு நம்பிக்கை அடியோடு போய்விட்டது. ஆட்சி தன் கைக்கு வந்தவுடன் முதல் வேலையாக பதினாறாவது வயதில் அக் நடான் என்று பெயரை மாற்றிக்கொண்டார் ஆமன் கோடப். இது கண்டு எகிப்திய மக்கள் திகைத்தனர். சக்தி வாய்ந்த தலைமை பூசாரிகள், இது என்ன அபச்சாரம் ஆமன் என்னும் கடவுளை பெயரில் இருந்து நீக்கிக்கொள்வதா? என்று வெகுண்டனர். ஆனால் அந்த டீன் ஏஜ் மன்னர் அவர்களை கையமர்த்தி சூரியனின் பெருமைகளை சொல்ல ஆரம்பித்தார். சூரியன் இல்லையேல் உலகம் இல்லை என்று வலியுறுத்தினார். அக் நடான் என்றால் அக் என் நடான் அதாவது அக் என்கின்ற சூரியனுக்கு பணிவிடை செய்கின்றவன் என்று அர்த்தம். இதை எல்லாம் கேட்டு பூசாரிகள் மகா கடுப்பில் ஆழ்ந்தாலும் வெளியே காட்டிக்கொள்ள முடியவில்லை. 




அத்தோடு நிறுத்தியிருந்திருக்கலாம்  அக் நடான். இனி இவரை இந்த பெயரிலேயே அழைப்போம். ஆனால் அக் நடானின் இளம் இரத்தம் அவரை அவசரப்படுத்தியது. சூரியன் ஏற்படுத்திய தன்னம்பிக்கையும், வீரியமும் தூண்டிவிட அடுத்த நடவடிக்கைகளில் இறங்கினார் மன்னர். இனி எகிப்தியர்களுக்கு சூரியன் மட்டுமே கடவுள். மற்ற கடவுள்களின் சிலைகள் அகற்றப்படும், அவர்களின் சித்திரங்கள் அழிக்கப்படும் என்று அறுவித்து அத்தனை கடவுள்களையும் நம்பி வாழ்ந்து கொண்டிருந்த பூசாரிகளின் வயிற்றில் கிலோக்கணக்கில் புளியை கரைத்தார் அக் நடான். தெற்கே நையில் நதியின் மேற்கு கரையில் இருந்த தீப்ஸ் பண்டைய எகிப்திய சாம்பிராஜ்யத்தின் தலைநகராக இருந்து வந்தது. அங்கே சூரியனுக்காக பெரிய அளவில் கோயில் கட்ட ஆரம்பித்தார் அக் நடான். கூடவே பழைய கடவுள்களின் ஏராளமான கோயில்கள் இடிக்கப்பட்டன. ஏற்கனவே குழப்பத்தில் இருந்த மக்களை பூசாரிகள் தூண்டிவிட மன்னருக்கு எதிர்ப்பு கிளம்பியது. அக் நடான் அசரவில்லை, தலைநகரத்தை தானே மாற்றியமைக்க கூடாது. சூரிய தேவனுக்காக நான் புதிய தலைநகரை உருவாக்குவதில் ஆட்சியமனை இல்லையே என்று முழங்கினார் மன்னர். தீப்ஸ் தலைநகருக்கு வடக்கே 156 மைல் தொலைவில் புதிய தலைநகரை கட்டுவற்க்கான பணிகளை படுவேகமாக தொடங்கினார். அமர்னா என்கின்ற இடத்தில் உருவான அந்த புதிய தலைநகருக்கு எட்டாவது மாதத்தில் அதாவது இன்றைய ஆகஸ்ட் பதின்மூன்றாம் திகதி அன்று இரு குதிரைகள் பூட்டிய தங்க ரதத்தில் பேரழகியான மனைவி நெப்ரட்டிட்டியுடன் பிரவேசித்தார் மன்னர் அக் நடான். இப்போது லாறிகளில் பொதுக்கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வருவது போல, புதிய தலைநகர சாலைகள் இருபுறமும் மக்கள் குவிக்கப்பட்டிருந்தனர். புதிய தலைநகரில் உருவெடுத்த சூரிய கடவுளின் ஆலயத்திற்கு கூரையே கிடையாது. சூரிய ஒளியை கூரை கட்டி தடுக்க வேண்டாம் என்று கட்டட கலைஞர்களுக்கு எடுத்துக்கூறிவிட்டார் அக் நடான். ஒன்றை சொல்ல வேண்டும் கடவுள்களின் சிலைகளை அப்புறப்படுத்துவதில் அக் நடான் பாரபட்சம் ஏதும் காட்டவில்லை. கடவுள் வடிவில் செதுக்கப்பட்ட தன் தந்தையின் சிலையையும் உடைத்து தள்ளச் சொன்னார் மன்னர். 

அத்தோடு சூரிய கடவுளை பற்றி பல கவிதைகளை பரவசமாக எழுதித்தள்ளினார் அக் நடான். கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்ட அந்த கவிதைகள் இன்று கேரோ மியூசியத்தில் நாம் பார்க்கலாம். ஓர் உதாரணம், முட்டைக்குள் கருவாக இருக்கும் கோழி குஞ்சுக்கு உயிர் தரும் சூரிய தேவனே. அது கச்சிதமானவுடன் வெளிப்பட வைத்து தத்தி தத்தி நடக்க வைக்கும் நீ. கிழே தண்ணீர் பொங்கும் நையில் நதியை படைத்தாய். மேலே வானம் என்கின்ற நீல நிற நையில் நதியையும் படைத்து மழை பொழிய செய்கின்றாய். என்ற ரீதியில் அக் நடான் கவிதைகள் தொடங்குகின்றன. 

மேலும் அக் நடான் புரட்சிகள் தொடர்ந்தன. சிற்ப கலைஞர்களையும், ஓவிய கலைஞர்களையும் வரவழைத்து, இனி உங்கள் படைப்புக்களில் உண்மை இருக்கட்டும். மன்னராக இருந்தாலும் சரி, மகாராணியாக இருந்தாலும் சரி பார்ப்பதை பார்ப்பது போல வரையுங்கள். மன்னருக்கு தொப்பை இருந்தால் ஓவியத்திலும் தொப்பை இருக்கட்டும். இல்லாத தெய்வீக அழகை சேர்க்கும் பொய்யான படைப்புக்கள் இனி வேண்டாம் என்று ஆணையிட்டு முதன் முதலில் கலையில் ரியலிசத்திற்கு வழிவகுத்தவர் அக் நடான். ஆகவேதான் என்பது ஆண்டுகளுக்கு முன் கண்டெடுத்து இன்று பெர்லின் மியூசியத்தில் உள்ள மன்னரின் மனைவி நெப்ரட்டிட்டியின் வண்ணச்சிலை மூலம் அவள் எத்தனை பேரழகி என்று தெரிகின்றது.

ஒரே கடவுள் என்று முழங்கிய அக் நடானின் அதிரடி நடவடிக்கைகளில் பொறுமை இழந்த பூசாரிகள் மன்னரின் குடும்பத்தில் குழப்பம் செய்ய முடிவு செய்து ராணி நெப்ரட்டிட்டியின் மனதை கலைத்தனர். கடவுள்களை அவமதிப்பது பெரும் பாவம் என்று அவர்கள் சொன்னதை கேட்டு பயந்துபோன மகாராணி கணவரை விட்டு பிரிந்து போனார் என்று தெரிகின்றது. திடீர் என்று சிற்ப்பங்களிலும், ஓவியங்களிலும் அவள் காணாமல் போய்விட்டாள் என்று சுட்டி காட்டுகின்றனர் தொல்பொருள் ஆய்வாளர்கள். ஆனால் மனைவி தன்னை விட்டு பிரிந்தது குறித்து அக் நடான் கவலை பட்டதாகவே தெரியவில்லை. அவருடைய சித்தாந்தம் போகப்போக தீவிரமடைந்தது. போதிய வருமானமும், செல்வாக்கும் இல்லாமல் இறுக்கமான முகத்துடன் வளையவந்த வந்த பூசாரிகளுக்கு திடீர் என்று அதிஷ்டம் அடித்து. தனது இருபத்தி ஆறாவது வயதில் அகால மரணம் அடைந்தார் அக் நடான். மகிழ்ச்சி கூத்தாடிய பூசாரிகள், அக் நடான் அல்ப்பாயிசத்தில் இறக்க காரணமே ஆமன் கடவுளின் சாபம் தான் என்று குரல் எழுப்பினர். மக்கள் பயத்தில் தலையாட்ட,  மீண்டும் எகிப்தில் பழைய படி இரண்டாயிரம் கடவுள்களின் மறுபிரவேசம் கோலாகலமாக நிகழ்ந்தது. கூடவே அக் நடான் சிலைகள் சுக்குனுறாக உடைக்கப்பட்டன. அந்த வித்தியாசமான மன்னரின் கல்லறை சின்னமோ, அடையாளமோ இல்லாமல் மிகுந்த வெறுப்புணர்வோடு பூசாரிகள் எங்கோ கண்காணாத இடத்தில் அக் நடானை புதைத்திருக்க வேண்டும். கூடவே கிரிமினல் மன்னர் என்ற அடைமொழியையும் அவருக்கு சூட்டினார்கள் பூசாரிகள். பிறகு அமர்னாவை விட்டு மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். அது பாவப்பட்ட பூமி என்று பூசாரிகள் கர்ஜித்தார்கள். புதிய தலைநகரம் மெல்ல பாழடைந்து மண்ணுக்குள் போனது.

சுமார் என்பது ஆண்டுகளுக்கு முன் தொல்பொருள் ஆராட்சியாளர்கள் அதை மீண்டும் அப்படியே தோண்டி வெளிக்குனர்ந்து விட்டது வேறு விஷயம். ஆனால் அக் நடானுக்கு கிடைத்த எந்தவொரு பெருமையையும் எந்த பூசாரியாளும் அகற்றமுடியவில்லை. இன்றளவும் வரலாற்று மேதைகள் அக் நடானை உலக சரித்திரத்தின் தனிப்பெரும் முதல் மனிதன், அதாவது First Individual என்று அழைக்கின்றனர். பிரத்தேகமாக சிந்திக்க தொடங்கிய முதல் மனிதன் என்ற அர்த்தத்தில்.   


நன்றி                         

No comments :

Post a Comment