e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

இலக்கு ஒன்றே உறுதி வீறுநடை போடு என் நண்பனே

No comments
மாணவர்கள் சக்திக்கு எத்தனை பெரிய வலு உண்டு என்பதை மாணவர்களே அறிந்து கொண்ட மகத்தான நேரம் இது. மாணவர்களின் போராட்ட களம் வீரியம் பெறுகின்ற முக்கிய காலகட்டத்தில் தமிழனம் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டிய கடமை ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாணவ சமூகம் தன்மானம் உள்ள தமிழனை எதிர்பார்த்து அழைப்பு விடுக்கின்றது.  அவர்களோடு தோளோடு தோள் நின்று  போராட்ட இலக்கை அடையும் வரை அவர்களின் இலட்சியத்தையும் உறுதியையும் இறுக அணைத்துக்கொள்வோம்.



மாணவ நண்பர்கள் விடுதலைக்கான உறுதி எடுத்து பல நாட்கள் கடந்து விட்டன. எத்தனையோ அரசியல் கட்சிகள் மாறி மாறி தமிழீழ போராட்டத்தை தங்களது சுயநல அரசியல் பதவிக்காக பயன்படுத்தி, மிதமிஞ்சிய பொய்மை வாக்குறுதிகளை அளித்தனர். நீதியை மட்டும் நம்பியிருந்த அத்தனை உண்மை தமிழ் மக்களையும் ஏமாற்றி  அநீதிக்கு சார்பாக செயல்பட்டனர். இவை எல்லாம் சகித்து சகித்து பொறுக்கமுடியாமல் ஒட்டு மொத்த மாணவ சமூகமும் பொங்கி குமுற ஆரம்பித்து நெடுநாளாகிவிட்டது. உண்மைக்காக, அநீதிக்கு எதிராக ஒவ்வொரு மாணவ நண்பனும் போராட்ட களத்தில் உயிர்ப்புடன் நீதியை நிலை நாட்ட தன் கடமையை செய்கின்றான். தடைகளை கண்டு கலங்கவில்லை அவர்கள் நெஞ்சம், மாறாக துடிப்புடன் அடுத்த கட்ட போராட்டத்திற்கான களங்களை விரிவு படுத்தி. சக்தி மிக்க மாணவ சொத்துக்களை சங்கிலி தொடர் போலே பிணைத்து போராட்ட களத்தில் இணைக்கின்றனர். நாளுக்கு நாள் வீரியம் அடையும் இப்போராட்டம் தமிழகத்தை மட்டும் அல்ல இந்தியாவையே ஏன் உலகத்தை திருப்பி பார்க்க செய்துள்ளது. உலக சரித்திரத்தில் இல்லாத மாணவ புரட்சி இப்போது தமிழகத்தில் மட்டும் இன்றி பிற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.



சிறு பொறியாக வெடித்த இந்த புரட்சி பெரும் தீயாக உலக மாணவர்கள் உள்ளங்களில் அணையாது சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கின்றது. அதை அணைப்பதற்கான வேலைகளில் சில விசமிகள் ஈடுபட்டுகொண்டிருப்பதும் மாணவர்கள் அறியாதது அல்ல.  இரத்தம் இன்றி ஆயுதம் இன்றி தண்ணீர், உணவு இன்றி  உண்டி காய்ந்து அமைதியாக போராடும் ஒவ்வொரு மாணவனும் என் நண்பனே. வெறுமனே தற்காலிகமான பதவி ஆசைகளில் மயங்கி வாழ்ந்த அத்தனை அரசியல்வாதிகளின் வயிற்றில் கிலி ஏற்படுத்தி, இந்திய அரசியல் மாற்றத்திற்கே வழிகோலும் போராட்டமாகவே இது கவனிக்கப்படுகின்றது. பெண்களில் இருந்து ஆண்கள் வரைக்கும் வீதிகளில் இறங்கி தங்களது போராட்ட முழக்கங்களை முழங்கும் வரை இந்திய அரசியலில் இருந்த அசட்டு தன்மை இப்போது விழி பிதுங்கி ஏது செய்வது என்று புரியாமல் திண்டாடுகின்றது.   

    
இந்த போராட்டங்கள் பற்றிய செய்திகளை கூறாமல் மௌனம் காக்கின்ற  ஊடகங்களும் தங்களது பதிவுகளை அவ்வப்போது வெளியுலகத்திற்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கான தொடர்புகள் இல்லாத வேளை போராட்டம் இடைநடுவே அறுந்து விடலாம். ஆகவே ஊடகங்கள் அவர்கள் போராட்டம் பற்றிய விடயங்களை உலகுக்கு பறைசாற்ற வேண்டும். இவர்கள் அனைவரும் வெறும் சோற்று பொட்டலத்திற்க்காக போராடவில்லை இலட்சியங்களுக்காக இணைந்துள்ளனர் என்பதை இடைவிடாது ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப வேண்டும். மாணவர்கள் உறுதி நிலைக்க, போராட்டம் வெற்றி பெற, எதிரிகள் சூழ்ச்சி பொடிப்பொடியாக ஊடகமே மாணவ போராட்ட உண்மை தன்மையை ஒளிவுமறைவு இன்றி எடுத்துலக வேண்டும். மாணவர் போராட்ட களமாக இருந்து வந்த நிலையில், அவர்களோடு சேர்த்து வேறு பல அமைப்புக்களும், துறைகளும் போராட இறங்கியுள்ளனர். அத்தோடு சினிமா துறையினரும் மாணவருக்கு உற்சாகம் கொடுக்கும் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



மாணவர்கள் போராட்டம் மனதிற்கு மகிழ்ச்சியையும், உறுதியையும் கொடுக்கின்றது. தமிழன் சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற முழக்கத்தை உரக்க கூறி மார்தட்டி கொள்ள வைத்த மாணவர்களுக்கு நன்றி என்று கூறி என்னை அவர்களுடன் இருந்து பிரித்து கொள்ள விரும்பவில்லை. நாம் வாழ்வது மக்களாட்சி என்கின்ற போது மௌனம் சாதிக்கும் அரசை தட்டி உரக்க நமது இலக்கை தெரிவிப்போம். நமக்கு தேவை தமிழர் ஆட்சியே.

முன்னைய பதிவு : தொடர் தமிழக மாணவர்கள் எழுச்சி

நன்றி              

No comments :

Post a Comment