e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

பல்லவ நாட்டிய கலைச் செல்வி சிவகாமி - II

No comments
பல்லவ நாட்டிய கலைச் செல்வி சிவகாமி - I 

பின்னர் எட்டு மாதங்கள் கழித்து காஞ்சி கோட்டை தளபதியாக பரஞ்சோதி மகேந்திர பல்லவரால் நியமிக்க படுகின்றான். அதோடு நரசிம்ம பல்லவருக்கு துணையாக காஞ்சியில் தங்கியிருக்கு மாறு மகேந்திர பல்லவர் உத்தரவு பிறப்பிக்கின்றார். இதற்கிடையில் புலிக்கேசி குறிப்பிட்ட எட்டு மாத காலங்களும் நாகநந்தி செய்திக்கு துங்கபத்திர நதிக்கரையிலேயே சைனியத்துடன் காத்துக் கொண்டிருந்தான். நாகநந்தியை பின் தொடர்ந்து அவர் என்ன காரியங்களில் ஈடுபடுகின்றார் என்பதை தெரிந்து வர சத்துருக்கன் என்னும் ஒற்றனை மகேந்திர பல்லவர் அனுப்பியிருந்தார்.  நாகநந்தி பரஞ்சோதிக்கு ஓலை கொடுத்து நாகார்ஜுன மலைக்கு அனுப்பிய பிற்ப்பாடு தெற்கே கிளம்பிப் போனான். அங்கே பாண்டிய மன்னன் சடையவர்மனுக்கும், நாகநந்தி பிக்குவிக்கும் பேச்சுவார்த்தை நடந்தது.

இதற்கிடையே மாமல்லருக்கு பெண் கொடுக்கும் விடயமாக காஞ்சிக்கு அனுப்பிய தூதர்கள் அங்கே திரும்பி வந்தார்கள். பின்னர் பாண்டிய மன்னன் நாடெங்கும் படை திரட்டும் படி கட்டளை பிறப்பித்திருந்தான். நாகநந்தி பின்னர் ஆயனர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அவர் அறியாமல் சத்துருக்கனும் அவரை தொடர்ந்து வந்தான். தான் இல்லாத சமயம் ஆயனரை கண்காணிக்கும்படி குண்டோதரன் என்னும் ஒற்றனை சத்துருக்கன் விட்டுவிட்டுப் போயிருந்தான். அதே போல் காஞ்சிக் கோட்டைக்குள் நரசிம்மரின் போக்கு வரவுகளை கவனிக்கும் படி கண்ணபிரான் தந்தையை ஏற்படுத்தியிருந்தான். இரு ஒற்றர்களிடம் இருந்து சில தகவல்களை பெற்றுக்கொண்டு பாபாக்கினி நதிக்கரையில் பல்லவ சைனியத்துடன் பாசறையில் இருந்த மகேந்திர சக்கரவர்த்தியிடம் ஒற்றர்களிடம் பெற்ற  தகவலை தெரிவித்தான். கூடவே நரசிம்ம பல்லவருக்கும், சிவகாமிக்கும் இடையே கண்ணபிரானால் பரிமாறப்பட்ட காதல் ஓலைகளை கொடுத்தான்.

ஓலைகளை படித்துவிட்டு மகேந்திர சக்கரவர்த்தி கலக்கம் உற்றார். பின்னர் சத்துருக்கனுக்கு ஓலை ஒன்றை கொடுத்து அவசரமாக கஞ்சிக்கு போகச் சொன்னார். புலிக்கேசியின் புதிய உறவினால் ஏற்பட்ட உத்வேகத்தில் கங்கமன்னன் துர்விநீதன் படையுடன் தலைக்காட்டில் இருந்து காஞ்சி நகரை நோக்கி வருவதாகவும், அதை எதிர்த்து நிர்மூலமாக்குவதற்கு நரசிம்மர் போர்க்களம் செல்ல வேண்டும் என்றும், போகும் வழியில் சிவகாமியை சந்தித்து விட்டு போகும் படியும் சத்துருக்கனுக்கு தகவல் செய்து கொடுத்து அனுப்பினர். காஞ்சி திரும்பி வந்த ஒற்றன் சத்துருக்கன் மேற்கண்ட செய்திகளை நரசிம்மனுக்கு தெரியப்படுத்தினான். பல காலம் காஞ்சி கோட்டைக்குள்ளே அடை பட்டு கிடந்த நரசிம்மர் மகிழ்ச்சி கூத்தாடினார். புதிய கோட்டை தளபதி பரஞ்சோதியுடன், நரசிம்மர் பல்லவ படையுடன் புறப்பட்டார். போகும் வழியில் ஆயனர் வீட்டிற்கு சென்று சிவகாமியை பார்க்க சென்ற நரசிம்மர், அவர்கள் அங்கே இல்லை என்று அறிந்ததும் மிக்க ஏமாற்றம் அடைந்தார். இதற்கிடையில் நாகநந்தி ஆயனரையும், சிவகாமியையும் கூட்டிக் கொண்டு அசோகநகரத்திற்கு சென்றார்கள். வழியில் ஒற்றன் கொண்டோதரனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். நாகநந்தி சூழ்ச்சி என்னவென்று அறியாமல் அசோகநகர புத்த விகாரத்தில் தங்கியிருந்தார்கள்.


மகேந்திர சக்கரவர்த்தியின் ராஜ தந்திர நடவடிக்கையினால் கங்கநாட்டு சைனியம் பல்லவ இராஜ்யத்துக்குள் நுழைந்து காஞ்சி நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. காஞ்சி நகருக்கு தென் மேற்கே இரண்டு காத துரத்தில் புள்ளூர்க் கிராமத்து எல்லையிலே இரு சைனியங்களும் சந்தித்தன. கங்கநாட்டு படை பல்லவ நாட்டு படையை பார்க்கிலும் மூன்று மடங்கு பெரியது. போர்க் களத்தில் மாமல்லரும், பரஞ்சோதியும் கையாண்ட யுத்த தந்திரங்களும், வீர செயல்களும் பல்லவ படை வீரர்களுக்கு பெரும் உற்சாகம் கொடுத்தது. கூடவே மகேந்திர பல்லவர்  இன்னொரு புறம் ஒரு படையுடன் வந்து கங்கநாட்டு சைனியத்தை ஒரு வழி பண்ணியது. இதை பார்த்த கங்க மன்னன் பயந்து தெற்கு திற்கே ஓடி தப்பித்தான். திருக்கோவலூர்க் கோட்டத் தலைவன் மகேந்திர சக்கரவர்த்தியின் கட்டளைப் படி அங்குள்ள மலைப்பிரதேசத்தில் தப்பித்து வந்த துர்விநீதனை சிறைப்படுத்தினான். இதற்கிடையில் பெரும் மழையினால் திருப்பாற்கடல் ஏரி உடைத்துக் கொண்டு பெரு வெள்ளம் அசோகநகரை தாக்கியது. தப்பிக்க முடியாமல் தவித்த அவர்களை காப்பாற்ற போர் முன்னையில் இருந்து தனியாக நரசிம்ம பல்லவர் வெள்ளத்தில் நீந்தி அங்கே வந்து சேர்ந்தார். தக்க சமயத்தில் எங்கிருந்தோ குண்டோதரன் பனைத் தெப்பம் ஒன்றை எடுத்து வந்தான். வெள்ளத்தில் இருந்து எல்லோருமாக அதில் ஏறி கிளம்பினார்கள். வெள்ளத்தின் வேகத்தில் பனைத் தெப்பம் உடைந்து விட சந்தர்ப்ப வசமாக ஒரு கிராமத்தில் அனைவரும் தங்குகின்றனர்.பிரிவினால் நெடுநாளாக சேர்த்து வைத்த காதல் உணர்ச்சிகளை நரசிம்மரும், சிவகாமியும் பேசி தீர்த்துக் கொண்டார்கள். வெள்ளத்தில் இருந்து எவ்வாறோ தப்பித்த புலிக்கேசியின் அந்தரங்க ஒற்றன் நாகநந்தி அங்கே வந்தான். சிவகாமி நரசிம்மரை காதலிப்பதை ஒட்டு கேட்டு நரசிம்மரை கொன்று விட சமயம் பார்த்து திரிகின்றான். இதை அவதானித்த ஒற்றன் குண்டோதரன் நரசிம்மரை நாகநந்தியிடம் இருந்து காப்பாற்ற முயல்கின்றான். அதன் பயனாக நகநாகநந்தியை ஒரு கோயில் அறையில் அடைத்து விட்டு, அவன் வைத்திருந்த விஷம் தடவிய கத்தியையும் அபகரித்து விட்டு செல்கின்றான்.

நரசிம்மரை தேடி பரஞ்சோதி அந்த கிராமத்துக்கு வருகின்றான். நரசிம்மரை அங்கு சந்தித்து புலிக்கேசி காஞ்சி கோட்டையை நெருங்கி வந்து விட்டதாகவும் தாங்கள் அவசரமாக காஞ்சி கோட்டைக்கு வந்து சேரும் படி மகேந்திர பல்லவர் கட்டளையிட்டிருப்பதாக கூறுகின்றான். உடனே இருவருமாக காஞ்சி கோட்டை நோக்கி புறப்படுகின்றனர். பின்னர் அந்த கிராமத்துக்கு மகேந்திர சக்கரவர்த்தி ஒற்றன் நாகநந்தியை தேடி வருகின்றார். அங்கே நாட்டிய சிவகாமி இருப்பதை பார்த்து விடுகின்றார். அவள் காதலன் நரசிம்மரை மறந்து விடும்படி மகேந்திர பல்லவர் வேண்டுகின்றார்.  சிவகாமி இந்த தியாகத்தை செய்வதன் மூலம் நரசிம்மனை பாண்டிய நாட்டு மன்னன் மகளுக்கு மணம் முடித்து வைத்து புலிக்கேசி சைனியத்தை பாண்டியனின் உதவியுடன் காஞ்சி நகரை காப்பாற்றி விடலாம் என்று கூறுகின்றான். ஆனால் சிவகாமி மகேந்திர பல்லவரின் வேண்டுகோளுக்கு மறுக்கின்றாள். பின்னர் குண்டோதரனை சந்தித்த மகேந்திர சக்கரவர்த்தி நாகநந்தியை சிறை பிடித்த தகவலை கேட்டு தெரிந்து கொள்கின்றார். ஆனால் நாகநந்தி  மகேந்திர பல்லவர் ஆயனருக்கு கொடுத்த பல்லவ இலட்சினையுடன் அங்கிருந்து தப்பித்து காஞ்சி செல்கின்றான்.                  

நரசிம்ம பல்லவரும், பரஞ்சோதியும் காஞ்சி கோட்டையை அன்றே சென்று அடைந்தார்கள். அங்கே மகேந்திர சக்கரவர்த்தி வந்து சேரவில்லை தெரிந்து கொள்கின்றனர். ஆதலால் நரசிம்ம மாமல்லரின் தலைமையில் மந்திர ஆலோசனை காஞ்சி கோட்டையில் நடை பெற்றது. அதில் வாதாபி மன்னன் புலிக்கேசி பெரும் சைனியத்துடன் காஞ்சி நகரை தும்சம் செய்ய நெருங்கி விட்டதால் அவனை எதிர்கொள்வதற்கான வழி முறைகளை பற்றி ஆலோசனை நடை பெற்றது. அந்த வேளையில் அங்கே வந்த நாகநந்தி ஒரு பொய் ஓலையை கொடுத்து மகேந்தர சக்கரவர்த்தி புலிக்கேசி ஆட்களால் கைதுசெய்யப் பட்டதாக கூறுகின்றான்.நாகநந்தியின் சூழ்ச்சியை அறிந்து கொள்ளாத நரசிம்ம பல்லவர் உடனே புலிக்கேசி படையுடன் யுத்தம் செய்து தந்தையை மீட்க தயாரகுகின்றான். அதற்கிடையில் அங்கு வந்து சேர்ந்தார் மகேந்திர சக்கரவர்த்தி. இதை சற்றும் எதிர்பார்க்காத நாகநந்தி தப்பிக்க முனைந்த பொது பல்லவ காவலாளிகளால் சிறைப் படுத்தப்படுகின்றான். தொடர்ந்து மகேந்திர சக்கரவர்த்தி தலைமையில் மந்திர ஆலோசனை கூடியது. புலிக்கேசியை எதிர்த்து போர் செய்வதை விட ராணுவ யுக்திகள் மூலம் எதிர் கொள்ளவது என்று சபையோர் அனைவராலும் முடிவு செய்யப்பட்டு அதற்க்குரிய விரைவாக ஏற்பாடுகளும் நடந்தன.  

மறு நாள் காலை வாதாபி சக்கரவர்த்தி சைனியம் காஞ்சி கோட்டையை முற்றுகையிட்டது. வாதாபி வீரர்கள் காஞ்சிக் கோட்டையை சூழ்ந்த உடன் மூர்க்கத்தனமாக செயல்பட்டார்கள். ஆனால் ஒரு வாதாபி வீரனால் கூட காஞ்சிக் கோட்டைக்குள் கால் வைக்க முடியவில்லை. கோட்டை மதில்களின் மேல் மறைவான இடங்களிலிருந்து மழை போல் பொழிந்த அம்புகளும், கோட்டைக்கு வெளியே அகழியிலிருந்த முதலைகள் வாதாபி வீரர்களை எமலோகத்துக்கு அனுப்பின. கோட்டையை தாக்கிய யானை படை பல்லவர்களின் முன் ஏற்பாடுகளால் சேதமடைந்தன. முற்றுகை ஆரம்பமாகி ஆறு மாத காலத்தில் வாதவி சைனியத்துக்கு உணவு மற்றும் குடிதண்ணீர் பஞ்சம் ஏற்ப்பட்டது. யுத்தத்தில் ஏற்ப்பட்ட பின்னடைவுகளை சரி செய்து கொள்வதற்காக பாண்டிய மன்னனின் உதவியை பெற்றுக்கொள்ள புலிக்கேசி தெற்கே நோக்கி பயணமானான். பாண்டியன், தன் மகளை மாமல்லர் மணம் செய்து கொள்ள மறுத்ததால் பல்லவர் மீது பெரும் கோபம் கொண்டிருந்தான். இதனால் பல்லவருடன் யுத்தம் செய்வதற்காக பெரும் படையுடன் கொள்ளிடக்கரையில் ஜயந்தவர்ம பாண்டியன் பாசறை அமைத்து தங்கியிருந்தான். அவனோடு கொடும்பாளூர் களப்பாளனும் சேர நாட்டு சிற்றரசன் இளஞ்சேரலாதனும் தங்கியிருந்தார்கள்.  அச் சமயம் புலிக்கேசி அங்கே வந்து சேர்ந்தான். கீழ்க்கண்டவாறு இரு தரப்புக்கும் திருப்திகரமான உடன்படிக்கையைச் செய்து கொண்டனர். புலிகேசி காஞ்சிக்குத் திரும்பிச் சென்று கோட்டை முற்றுகையை இன்னும் தீவிரமாய் நடத்த வேண்டியது. காஞ்சிக் கோட்டை பணிகிற வரையில் வாதாபிச் சைனியத்துக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பாண்டியன் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டியது. கொள்ளிடத்தில் தண்ணீர் குறைந்ததும் பாண்டியன் தன் சைனியத்துடன் நதியைத் தாண்டி முன்னேறி வந்து தென்பெண்ணை நதி வரையில் கைப்பற்றிக் கொள்ள வேண்டியது. திருக்கோவலூர்க் கோட்டத் தலைவனைப் பிடித்துக் கடுமையாகத் தண்டிப்பதுடன், அங்குள்ள மலைப்பிரதேசத்தில் துர்விநீதன் சிறைப்பட்டிருந்தால், அவனை விடுதலை செய்து அனுப்பி வைக்க வேண்டியது. இந்த உதவிகளையெல்லாம் பாண்டியன் செய்வதற்குக் கைம்மாறாகக் குமரி முனையிலிருந்து தென்பெண்ணை வரை உள்ள பிரதேசத்தின் மகா சக்கரவர்த்தியாக ஜயந்தவர்ம பாண்டியனை புலிகேசி அங்கீகரிக்க வேண்டியது. இவ்வாறு பாண்டியனிடம் உடன்படிக்கை செய்து விட்டு மீண்டும் காஞ்சிக் கோட்டை நோக்கி திரும்பினான் புலிக்கேசி.

இதற்கிடையில் மகேந்திர சக்கரவர்த்தி ராஜ தந்திர திட்டம் ஒன்றை காஞ்சிக் கோட்டைக்குள் இருந்து தயாரித்தார். ஆதாவது  ஒற்றனாகிய குண்டோதரனிடன் ஓலை ஒன்றை கொடுத்து அவனிடம் நாகநந்தி ஓலை தந்து புலிக்கேசியிடம் கொடுக்க சொன்னதாக புலிக்கேசியை நம்ப செய்ய வேண்டும் என்பதே அந்த திட்டம். அதன் படியே குண்டோதரன் வாதாபி படையிடம் சென்று புலிக்கேசியை சந்தித்து பல்லவ சிறையில் அடைபட்டிருக்கும் நாகநந்தி கொடுக்க சொன்னதாக கூறி ஓலையை கொடுத்தான். அதில் கிழ்கண்டவாறு எழுதியிருந்தன பாண்டிய மன்னனை நம்ப வேண்டாம் என்றும், கங்கமன்னன் துர்விநீதன் தங்களை ஏமாற்றி மருமகன் விஷ்ணுவர்தனை வாதாபி சக்கரவர்த்தியாக முடிசூட  அந்தரங்க ஆசை கொண்டிருப்பது  பற்றியும்,  காஞ்சி முற்றுகை நீடித்து வைத்திருப்பதில் பயனில்லை என்றும், மாமல்லபுரத்தில் செதுக்கியிருக்கும் சிற்பங்களுக்கு சளுக்கர் படையால் சேதம் ஏற்படுமாயின் ஏற்படும் பின் விளைவுகளையும் பற்றியும் அந்த ஓலையில் அடங்கியிருந்தது.  நாகநந்தி அனுப்பிய ஓலையில் இருந்த தகவல்களை உண்மை என்று நம்பி சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள விரும்புவதாக தூதுவர்கள் மூலம் மகேந்திர சக்கரவர்த்திக்கு தெரிவித்திருந்தான். அதோடு காஞ்சி நகருக்குள் விருந்தினராக பிரவேசிக்க விரும்புவதாகவும் கூறியிருந்தான். இதனால்  தன் திட்டம் பலித்தது பற்றி மனதுக்குள் மகிழ்ச்சியில் திளைத்தார் மகேந்திர சக்கரவர்த்தி. புலிக்கேசியை தான் விருந்தினராக அழைத்து அவனிடம் சிநேகிதம் செய்து கொள்வதாகவும் சபையோரிடம் தெரிவித்தார். இந்த சமரச உடன்படிக்கை நரசிம்மருக்கு பிடிக்கவில்லை. அதனால் புலிக்கேசி காஞ்சிக்குள் வரும் சமயம் பரஞ்சோதியுடன் தான் காஞ்சியை விட்டு வெளியேறுவதாகவும். தற் சமயம் பல்லவ இராஜ்யத்துக்குள் நுழைந்திருக்கும் தென்பாண்டிய நாட்டானுடன் யுத்தம் செய்யபோவதாகவும் கூறி காஞ்சியை விட்டு கிளம்பினான். 

காஞ்சி நகருக்குள் விருந்தினராக வந்திருந்த புலிக்கேசிக்கு ராஜ வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சியின் அழகையும், அங்கு காணப்பட்ட சிற்ப சிலைகளையும், கோயில்களையும்பார்த்து வியந்தான். கூடவே ஆயனரையும் சிவகாமியையும் காஞ்சிக்கு அழைத்து விருந்தாளியாக வந்திருக்கும் புலிக்கேசிக்கு சிவகாமியின் நாட்டிய கலையும் காண்பித்தார் மகேந்திர பல்லவர். இதனால் சக்கரவர்த்திகள் இருவருக்குமிடையே நட்பு வளர்ந்தது. எட்டு நாட்கள் தங்கி காஞ்சி நகரை சுற்றி பார்த்து விட்டு புலிக்கேசி வாதாபிக்கு செல்லும் நாள் மகேந்திர பல்லவர் காஞ்சியை யுத்தத்தில் இருந்து காப்பாற்ற செய்த தந்திரங்களையும், புலிக்கேசியை ஏமாற்றிய சம்பவங்களையும்  புதிதாக ஏற்பட்ட நட்பின் காரணமாக புலிக்கேசியிடம் கூறினார். இதை கேட்ட புலிக்கேசி கோபம் கொண்டான் ஆனால் அதை மகேந்திர பல்லவரிடம் அவன் காட்டிக்கொள்ளவில்லை. காஞ்சிக் கோட்டைக்கு வெளியே சென்றதும் புலிக்கேசி மகேந்திர பல்லவரின் சூழ்ச்சியை பொறுக்க முடியாமல் வாதாபி படைகளுக்கு பின்னவருமாறு கட்டளையிட்டான். புலிக்கேசியும் முக்கிய தளபதிகளும் சைனியத்தில் பெரும் பகுதியுடன் வாதாபிக்கு உடனே புறப்பட வேண்டியது. சைனியத்தில் நல்ல தேகக்கட்டு வாய்ந்த வீரர்களாக ஐம்பதினாயிரம் பேரைப் பின்னால் நிறுத்த வேண்டியது. அவர்கள் தனித் தனிக் கூட்டமாகப் பிரிந்து காஞ்சி நகரைச் சுற்றிலும் நாலு காத தூரம் வரை உள்ள கிராமங்கள், பட்டணங்களை எல்லாம் சூறையாடிக் கொளுத்தி அழித்து விடவேண்டியது. அந்தந்தக் கிராமங்களிலுள்ள இளம் பெண்களை எல்லாம் சிறைப்பிடித்துக் கொண்டு,வாலிபர்களை எல்லாம் கொன்று, வயதானவர்களை எல்லாம் அங்கவீனம் செய்து, இன்னும் என்னென்ன விதமாகவெல்லாம் பழிவாங்கலாமோ அவ்விதமெல்லாம் செய்ய வேண்டியது. முக்கியமாக, சிற்பங்கள் - சிற்ப மண்டபங்கள் முதலியவற்றைக் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் இடித்துத் தள்ள வேண்டியது. சிற்பிகளைக் கண்டால் ஒரு காலும் ஒரு கையும் வெட்டிப் போட்டுவிட வேண்டியது. இப்படிப்பட்ட கொடூர பயங்கரமான கட்டளைகளைப் போட்டு அவற்றை நிறைவேற்றுவதற்குத் தக்க பாத்திரங்களையும் நியமித்து ஏவி விட்டு, வாதாபிச் சக்கரவர்த்தி தமது சைனியத்தின் பெரும் பகுதியுடன் வாதாபி நோக்கி பிரயாணமானார். 


இந்த சந்தர்ப்பத்தில் புலிக்கேசியின் கட்டளையை ஒற்றர்கள் மூலம் அறிந்த மகேந்திர சக்கரவர்த்தி பல்லவ சிற்பங்களை சேதமடையாமல் தடுக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகநந்தியை யாரும் அறியாமல் சுரங்க பாதை வழியே விடுவிக்கின்றார். அதே சமயம் காஞ்சி கோட்டைக்குள் இருந்த ஆயன சிற்பியார் அஜந்தா ஓவிய ரகசியத்தை புலிக்கேசியிடம் அறிந்து கொள்ள விரும்பி அதே சுரங்க பாதை வழியே சிவகாமியுடன் காஞ்சிக் கோட்டையை விட்டு வெளியேறுகின்றார். வெளியே வந்த ஆயனரையும் சிவகாமியையும் வாதாபி வீரர்கள் பிடித்து விடுகின்றனர். புலிக்கேசியின் கட்டளைப் படி ஆயன சிற்பியின் கால் மற்றும் கையை வெட்ட போவதாக கூற சிவகாமி அங்கேயே மயங்கி விடுகின்றாள். பின்னர் அங்கே வந்த நாகநந்தியிடம் தன் தந்தையை காப்பாற்றுமாறு கெஞ்சுகின்றாள். வஞ்சக எண்ணம் கொண்ட நாகநந்தி புலிக்கேசி சக்கரவர்த்தி போல் மகேந்திர பல்லவர் கொடுத்த ராஜ உடையை தரித்துக் கொண்டு வாதாபி வீரர்கள் கால் மற்றும் கையை துண்டிக்கும் பொருட்டு ஆயனரை கொண்டு சென்ற மலைக்கு சென்றார். ஆனால் தற்செயலாக ஆயனர் அந்த மலைச் சரிவில் விழுந்து விடுவதால் அவரின் கால்களை முறிந்து விடுகின்றன. பின்னர் அங்கு வந்த புலிக்கேசி வேடத்தில் இருக்கும் நாகநந்தி, ஆயனரை பார்த்து வாதாபி வீரர்கள் சிவகாமியை சிறை பிடித்து செல்வதாகவும், இன்னும் சில வீரர்கள் மாமல்லபுர சிற்ப்பங்களை சேதம் செய்ய போவதாகவும் கூறுகின்றார். சிவகாமியை காப்பாற்றுவதை காட்டிலும் சிற்பங்களை காப்பாற்றுமாறு நாகநந்தியிடம் வேண்டுகோள் விடுக்கின்றார். சிவகாமியை அடையும் நோக்குடன் நாகநந்தி பல்லவ சிற்பங்களை அழிவில் இருந்து காக்கின்றார். 


சிவகாமியும் ஆயனரும் காஞ்சியை விட்டு வெளியே சென்றதையும் சிவகாமியை வாதாபிக்கு சிறை பிடித்து சென்றதையும் அறிந்துகொள்கின்றார். உடனே படை திரட்டி சளுக்கர் படைகளை துவசம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.கூடவே பாண்டிய மன்னனுடன் போரில் வெற்றி பெற்று காஞ்சிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நரசிம்மருக்கு புலிக்கேசியினால் பல்லவ ராஜ்யத்துக்கு ஆபத்து உடனே காஞ்சிக்கு புறப்பட்டு வரும்படி தூதுவர்களிடம்  ஓலை கொடுத்து அனுப்பி விட்டு யுத்த களத்துக்கு புறப்பட்டார். ஓலைகளை மூலம் தகவல் அறிந்து கொண்ட நரசிம்மரும், பரஞ்சோதியும்   உடனே புறப்பட்டு யுத்தம் நடக்கும் மணிமங்களம் நகரை வந்து சேர்ந்தார்கள். பல்லவ சைனியத்துக்கும் சளுக்கர் படைக்கும் பெரும் போர் அங்கே நடந்தது. அதில் மகேந்திர பல்லவர் நாகநந்தியின் விஷக் கத்தியால் தாக்கப்பட்டு மரண காயம் அடைந்தார். சளுக்கர்களை பின் தொடர்ந்து  நரசிம்மரும், பரஞ்சோதியும் குதுரைப் படையுடன் வடக்கு நோக்கி சென்றார்கள். சூரமாரம் என்ற இடத்தில் போர் நடந்தது. சளுக்கர் படைக்கு பெரும் இழப்பு அதில் ஏற்ப்பட்டது. இருந்தும் புலிக்கேசி வெள்ளாற்றை கடந்து வாதாபி சென்று விட்டதாக தகவல் கிடைத்தது. தந்தையின் நிலைமையை கருத்தில் கொண்டு பல்லவ படை திரும்பி காஞ்சி வந்தது. அங்கு வந்தவர்களுக்கு சிவகாமி சளுக்கர் படையினால் சிறை பிடித்து செல்லப்பட்ட தகவல் ஆயனர் மூலம் தெரிந்து கொள்ளகின்றனர். இதற்கு முன்னமே மணிமங்களம் போர் களத்தில் மகேந்திர சக்கரவர்த்தி கட்டளைப் படி ஒற்றன் சத்துருக்கன் பெண் வேடம் பூண்டு புலிக்கேசியால் சிறை பிடித்து செல்ப்பட்ட சிவகாமியை பொன்முகலி ஆற்றுக்கும் வடபெண்ணைக்கும் நடுவில் விட்டுவிட்டு  வந்ததாக நரசிம்மருக்கு தகவல் கொடுக்கின்றான். இதற்கிடையில் வாதாபி படை வாதாபியை சென்றடைந்துவிட்டது. அங்கே புலிக்கேசி சக்கரவர்த்தியும் அவனது அண்ணன் நாகநந்தியும் தென்னாட்டு படையெடுப்பு தோல்வியில் முடிந்ததை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். மேலும் நாகநந்தி, காஞ்சி நாட்டிய கலைவாணி சிவகாமியையும் தன்னுடன் அழைத்து வந்தது பற்றி புலிக்கேசிக்கு தெரியப்படுத்துகின்றான். அவளை பத்திரமாக பாதுகாக்க புலிக்கேசியிடம் உதவி கோருகின்றான்.அதற்கு .வேங்கியில் விஷ்ணுவர்த்தனன் படுகாயப்பட்டுக் கிடப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. நாடெல்லாம் கலகமும் குழப்பமுமாய் இருக்கிறதாம். நீ அங்கு உடனே போய் அவனைக் காப்பாற்ற வேண்டும் என்று புலிக்கேசி ஒரு நிபந்தனை தெரிவிக்கின்றான். பின்னர் நாகநந்தி வேங்கை புறப்பட்டு சென்ற பிறகு புலிக்கேசி நாகநந்திக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுகின்றான். காஞ்சியில் இருந்து வாதாபி வீரர்களால் சிறை பிடிக்கப்பட்டு வந்த பெண்களை வீதியில் கட்டி சாட்டையால் அடித்து சித்திரவதை செய்வதை தடுக்க  வாதாபி நாற்சந்திகளில் வாதாபி மக்கள் முன் சிவகாமி நாட்டியம் ஆட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. பின்னர் புத்த பிக்கு நாகநந்தி வேங்கியில் இருந்து வாதாபி திரும்பியவுடன் சிவகாமிக்கு நடந்த அநீதிகளை கேட்டு புலிக்கேசியின் மேல் கோபம் கொள்கின்றான். பின்னர் நாகநந்தி, சிவகாமியை சந்தித்து அவளை  காஞ்சிக்கு விட்டுவிட்டு வருவதாக நயவஞ்சகமாக பேசி அவள் அன்பை பெற துடிக்கின்றான். காஞ்சிக்கு செல்ல சிவகாமி மறுக்கிறாள் அதோடு நாகநந்தியிடம் கிழ்கண்டவாறு சபதமிடுகின்றாள். வீர மாமல்லர் ஒரு நாள் இந்நகர் மீது படையெடுத்து வருவார். சளுக்க சைனியத்தைச் சின்னா பின்னம் செய்வார். நாற்சந்தி மூலைகளில் என்னை நடனம் ஆடச்செய்த பாதகப் புலிகேசியை எமன் உலகத்துக்கு அனுப்புவார். தமிழகத்து பெண்களை  கையைக் கட்டி ஊர்வலம் விட்ட வீதிகளில் இரத்த ஆறு ஓடும். அவர்களை நிறுத்திச் சாட்டையால் அடித்த நாற்சந்திகளிலே வாதாபி மக்களின் பிரேதங்கள் நாதியற்றுக்கிடக்கும். இந்தச் சளுக்கர் தலைநகரின் மாட மாளிகை, கூட கோபுரங்கள் எரிந்து சாம்பலாகும், இந்த நகரம் சுடுகாடாகும். அந்தக் காட்சியை என் கண்ணால் பார்த்துவிட்டுப் பிறகுத்தான் இந்த ஊரைவிட்டுக் கிளம்புவேன். சளுக்கப் பதர்களை வென்று வெற்றி மாலை சூடிய மாமல்லர் என் கரத்தைப் பிடித்து அழைத்துக்கொண்டு போவதற்கு வருவார். அப்போதுதான் புறப்படுவேன். இந்தப் பயங்கரமான சபதத்தைக் கேட்ட நாகநந்தி தம்முடைய சூழ்ச்சி மீண்டும் பலித்துவிட்டது என்று எண்ணி மகிழ்ச்சி அடைகின்றான். 


இதற்கிடையில் மரண படுக்கையில் கிடக்கும் மகேந்திர பல்லவரின் கட்டளைப் படி சிவகாமியை வாதாபியில் இருந்து மீட்டு வருவதற்காக ஒரு நள்ளிரவு நடுநிசி வேளையில் காஞ்சி அரண்மனையில் இருந்து ஆறு குதிரைகள் மீது ஆறு பேர் ஆரோகணித்துப் பிரயாணத்துக்கு ஆயத்தமாய் நின்றார்கள். தாடி, மீசை வைத்துக் கட்டிக்கொண்டிருந்த அந்த வேஷதாரிகள் மாமல்லர், பரஞ்சோதி, சத்ருக்னன், குண்டோதரன், கண்ணபிரான், அவனுடைய தந்தை அசுவபாலர் ஆகியவர்கள்தான் வாதாபி நோக்கி புறப்படுகின்றார்கள். பின்னர் சத்துருக்கன் வாதாபி நகருக்குள் சென்று சிவகாமி இருக்கும் இடத்தை கண்டுவிட்டு மாமல்லரிடம் தெரிவிக்கிறான். அமாவாசை ஒருநாள் இரவு யார் கண்ணிலும் படாமல் சிவகாமி தங்கிருந்த மாளிகைக்கு மாமல்லரும் பரஞ்சோதியும் வந்தார்கள். சிவகாமியை அழைத்து செல்ல வந்த நரசிம்மரிடம் சிவகாமி காஞ்சி வர மறுக்கின்றாள். தான் நாகநந்தியிடன் இட்ட சபதத்தை பற்றி மாமல்லரிடம் கூறுகின்றாள். மாமல்லரோ தான் அவளது சபதத்தை நிறைவேற்றி வைப்பதாக வாக்குறுதி அளித்தும் சிவகாமி பிடிவாதாமக வர மறுத்து விடுகின்றாள். இதற்கிடையில் சிவகாமியின் அரண்மனை நோக்கி நாகநந்தி அடிகள் வருவதை பார்த்த பரஞ்சோதி நரசிம்மருக்கு எச்சரிக்கின்றார். சூழ்நிலை புரியால் வீண் வாதம் செய்யும் சிவகாமியின் மேல் கோபமடைந்த நரசிம்மர் அவளை அங்கேயே விட்டுவிட்டு காஞ்சிக்கு புறப்படுகின்றார்.

பல்லவ நாட்டிய கலைச் செல்வி சிவகாமி - I 

தொடரும்...

நன்றி 

No comments :

Post a Comment