e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

பல்லவ நாட்டிய கலைச் செல்வி சிவகாமி - I

No comments
பொன்னியின் செல்வன் பெரும் நாவலை படித்து முடித்த ஆர்வத்தோடு கல்கியின் அடுத்த படைப்பான சிவகாமியின் சபதம் நாவலை படித்தேன். மிக அருமையான நாவல். பல்லவ சாம்ராஜ்யத்தின் சரித்திர பக்கங்களை புரட்டிய அனுபவம் கிடைத்தது. சிவகாமியின் சபதத்தாலும், சிவகாமி மீது நாகநந்தியின் கொண்ட காதல் மோகத்தாலும், நரசிம்ம பல்லவரின் அவசர கோபத்தாலும், ஆயனரின் அஜந்தா இரகசிய ஆசையாலும்,புலிக்கேசியின் ராஜ்ய மோகத்தாலும், மகேந்திர சக்கரவர்த்தி மற்றும் தளபதி பரஞ்சோதியின் ராஜ தந்திரங்களாலும் உருவானது சிவகாமியின் சபதம் என்ற காவியம். அதன் விளைவாக இந்த பதிவை இடுகின்றேன்.


இனி சிவகாமியின் சபதம் நாவலை சற்று விளாவரியாக நோக்குவோம்.

அன்று பல்லவ சக்கரவர்த்தி சிம்ம விஷ்ணுவின் புகழ் தென்னாடெங்கும் பரவியிருந்தது. அவர் ஆட்சி காலத்தில்  கீழைச் சோழ நாட்டை பல்லவ ராஜ்யத்துடன் சேர்த்துக்கொண்டார்.அதுபோல் உறையூர்ச் சோழர்களையும், பாண்டியர்களையும் அடக்கி தனக்கு கப்பம் கட்டச் செய்தார்.  பின்னர் ஆட்சிக்கு வந்த  சிம்ம விஷ்ணுவின் புதல்வர் மகேந்தர மாபல்லவ சக்கரவர்த்தி அவரது தந்தை வழியே காஞ்சியில் இராஜ்யம் அமைத்தார். அவர் தனது ஆட்சி காலங்களில் யுத்தங்களில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை.தனக்கு இருக்கின்ற பெரும் இராஜ்யம் போதும் என்ற வைராக்கியத்துடன் ஆட்சி புரிந்து வந்தார். சித்திரம், சிற்பம், கவிதை, சங்கீதம் நடனம் ஆகிய கலைகளில் அதிக ஆர்வர் கொண்டிருந்தார். குன்றுகளை குடைந்து கோயில்களாக்கும் கலையும், கற்பாறைகளிலே சிலைகளைச் செதுக்கும் கலையும் எங்கும் பரவிக்கிடந்தது.    எந்தெந்த தேசத்தில் என்னென்ன கலைகள் சிறந்து விளங்கியது என்று அறிந்து. அந்த கலைகளில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களை வரவழைத்து பல்லவ நாட்டிலும் அக்கலையை வளர்க்க முயன்று வந்தார்.  மகேந்தர மாபல்லவ சக்கரவர்த்தி மாறுவேடம் தரிப்பதில் மகாவல்லவராக திகழ்ந்தார். இதனால் அவருக்கு "விசித்திர சித்தர்" என்ற சிறப்பு பெயரும் இருந்து வந்தது. 
.

வாதாபி புலிக்கேசியும் இவனது தம்பிமார்களும் சிறு பிள்ளைகளாக இருந்தபோது, இவர்களின் சிற்றப்பன் மங்களேசன் என்பவன் வாதாபியை ராஜ்யத்தை ஆண்டு வந்தான். அவனுக்கு திடீர் என்று இராஜ்யத்தை விரிவு படுத்தி மாபெரும் சக்கரவர்த்தி ஆக வேண்டும் என்ற ஆசை தோன்றியது. துங்கபத்திரையை கடந்து கதம்ப ராஜ்யத்துக்குள் பிரவேசித்தான். மயூரசன்மன் என்பவன் உருவாக்கிய கதம்ப இராஜ்யத்தில் பிறந்தவர்கள் சென்ற இருநூறு வருடங்களாக பல்லவர்களுக்கு கப்பம் செலுத்திக்கொண்டு நன்றியுடன் இருந்து வந்தார்கள். கொஞ்சக்காலதிற்க்கு பிறகு அவர்கள் வைஜயந்தி பட்டணத்தில் தங்களது தலைநகரை அமைத்துக் கொண்டார்கள். இராஜ்யத்துக்கு ஆபத்து வரும் சமயங்களில் பல்லவர்களின் வேண்டிய உதவியையும் பெற்றுக்கொண்டார்கள்.பல்லவ சாம்ரஜ்யம் மகோன்னதத்தை அடைந்திருந்த காலத்தில் வாதாபி மன்னன் மங்களேசன் வைஜயந்தி நகரை முற்றுகையிட்டான்.  அப்போது வடக்கு மண்டலத்துப் பல்லவ படை கதம்ப ராஜாவின் ஒத்தாசைக்கு சென்று வாதாபி படையை துவம்சம் செய்தது. சளுக்கர்கள் தோற்று பின்வாங்கி ஓடினார்கள். அச் சமயம் வைஜயந்தி பட்டணத்திற்கு அருகில் நடந்த யுத்தத்தில் பல்லவ படை பெரிய இழப்பை ஒன்றை சந்தித்தது. அந்த போரில் பல்லவ சேனாதிபதி கலிப்பகையார் உயிர் துறந்தார். இதன் காரணமாக பின்வாங்கி ஓடிய சளுக்கர் படையை, பல்லவ படை பின் தொடர்ந்து செல்ல முடியாமல் போனது.    
  
மங்களேசன் ராஜ்யம் ஆளும் ஆசையில் புலிக்கேசியையும் இவனது தம்பிமார்களையும் சிறையில் போட்டிருந்தான். மங்களேசன் வைஜயந்திக்கு படையெடுத்து சென்ற சமயம் சிறையில் இருந்து புலிக்கேசியும் இவனது தம்பிமார்களும் கடுஞ்சிறையில் இருந்து தப்பித்தார்கள். சிற்றப்பன் மங்களேசனுக்கு பயந்து காட்டில் ஒளிந்து காலம் கழித்து வந்தார்கள்.  அவர்களுடன் வடமொழி கவி பாரவியும் கொஞ்சக்காலம் அவர்களுடன் இருந்தான். சிற்றப்பன் மங்களேசனுடைய  இருந்து தப்பித்து, துரத்தி வந்த காவலாளிகளிடம் ஒளிந்து, காட்டிலும் மலையிலும் அலைந்துதிரிந்தான் புலிக்கேசி. அஜந்தா அடிவாரத்தில் உள்ள ஒரு காட்டில் எதிர்பாராத விதமாக ஆச்சு அசலாக அவன் உருவத்தை ஒத்த நாகநந்தி பெயர் கொண்ட ஒரு மனிதரை சந்திகின்றான் அவன். பார்த்த கணத்திலேயே இருவருக்குமிடையே அபரவிதமான பாசம் ஏற்பட்டுவிடுகின்றது. அச் சமயத்தில் மங்களேசன் ஆட்கள் புலிக்கேசி இருக்கும் இடம் தேடி வந்து விடுகின்றனர். இதனால் தன் உருவத்தை ஒத்த மனிதரின் ஆலோசனைப்படி இருவரும் உடுத்தி இருந்த உடைகளை மாற்றி தரித்திக்கொண்டனர். புலிக்கேசி  அந்த மனிதரின் அறிவிப்பு படி ஒரு மரத்தில் ஏறி ஒளிந்து கொண்டான். அங்கு வந்த மங்களேசன் ஆட்கள் புலிக்கேசியின் உருவத்தில் இருந்த அந்த மனிதரை புலிக்கேசி என்று நினைத்துக்கொண்டு பிடித்து சென்று விடுகின்றனர். பின்னர் அவர்களால் பிடித்து கொண்டு வரப்பட்ட மனிதன் புலிக்கேசி இல்லை என்று தெரித்ததும், அவர்கள் அந்த மனிதரை சித்திரவதைக்கு ஆளாக்கினார்கள். அவர்களில் துன்புறுத்தல்களை தாங்க முடியாமல் அந்த மனிதர் தான் அஜந்தா புத்த சங்கத்தை சேர்ந்தவன் என்று தெரிவித்தான். இதற்கிடையே அந்த மனிதரின் ஆலோசனைப்படி புலிக்கேசி அஜந்தா சித்திர குகையை அடைந்தான். அங்கே தான் யார் என்று கூறாமல் சிற்பியின் சீடனாக காலம் கழித்து வந்தான். ஒரு வாரம் கழித்து மங்களேசன் ஆட்களால் விடுவிக்கப்பட்ட அந்த மனிதர் புலிக்கேசி தங்கி இருக்கும்  இடம் நோக்கி வந்து சேர்ந்தான். அங்கு சங்கிராமத்தின் புத்த பிக்குவால் நாகநந்தியும், புலிக்கேசியும் கூடப் பிறந்த அண்ணன், தம்பி என்று அறிந்து கொள்கின்றனர். இருவரும் இரட்டை பிள்ளைகள் என்றும், முதலில் பிறந்தவன் நாகநந்தி என்றும் ஐந்தாவது வயதிலேயே அவனது தந்தை தன்னிடம் நாகநந்தியை ஒப்படைத்ததாகவும் அஜந்தா புத்த சங்க தலைமை புத்த பிக்கு அவர்களின் பழைய வரலாற்றை இருவருக்கும் கூறுகின்றார். இதை கேட்ட புலிக்கேசி அவனது சிம்மாசனத்திற்கு ஆபத்து வந்ததாக அச்சமடைகின்றான். இதை அறிந்த நாகநந்தி , புலிக்கேசியின் சபலத்தை போக்க தலையை மொட்டை அடித்து கொண்டு காவி வஸ்திரம் தரித்த புத்த பிக்குவாகிக் கொள்கின்றான். இச் சமயத்தில் வைஜயந்தி பட்டண போரில் தோல்வியுற்று திரும்பிய சிற்றப்பன் மங்களேசனை கொன்று விட்டு வாதாபி மன்னனாக புலிக்கேசி முடி சூட்டிக்கொண்டான். அதற்கு பிறகு புத்த பிக்கு ஆகிய நாகநந்தி  அடிகளார் புலிக்கேசியின் ஆட்சியில் மதி மந்திரியாகவும், ராணுவ தந்திரியாகவும் முக்கிய பதிவி வகித்தார்.

பாரவி நண்பன் புலிக்கேசிக்கு பலம் தேடிக் கொடுப்பதற்க்காக  கங்கபாடிக்கு சென்றான். ஒரு காலத்தில் மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியின் தந்தையால் (சிம்ம விஷ்ணு) கங்கபாடி மன்னனாக முடி சூட்டப்பட்டவன் துர்விநீதன். அங்கு வந்த பாரவி புலிக்கேசியின் தம்பியான விஷ்ணுவர்த்தனுக்கு கங்கமன்னன் துர்விநீதனின் மகளை மணம் பேசி முடித்தார். இதனால் அவர் இருவர்களுக்குமான உறவு வலுப்பெற்றிருந்தது. பாரவி கங்கபாடிக்கு வந்ததை கேள்வியுற்ற மகேந்திர பல்லவர் கலையில் கொண்ட ஆர்வத்தால் அவரை காஞ்சிக்கு வரவழைத்தார். காஞ்சிக்கு வந்த பாரவிக்கு அந்நகரின் திருக்கோயில்களும், இராஜவீதிகளும், பூந்தோட்டங்களும் கவர்ந்து விட்டன.  அதே சமயம் வாதாபி மன்னனும் தனது சிநேகிதனுமான புலிக்கேசிக்கு அவ்வப்போது ஓலை மூலம் காஞ்சி நகரின் அழகை வர்ணித்தான். இதனால் காஞ்சி நகரின் மீது புலிக்கேசிக்கு எல்லை இல்லாத மோகம் பற்றிக்கொண்டது. 

புலிக்கேசியின் அண்ணன் ஆன நாகநந்தி தென்னாட்டுப் படையெடுப்பிற்க்கு முன் ஆயத்தம் செய்ய கொள்ள புறப்படுகின்றான். தென்னாடு எங்கும் பௌத்த மடங்களும் ஜைன மடங்களும் ஏராளமாக இருந்தன. அத்தோடு நாகநந்திக்காக காஞ்சி இராஜ விவகாரத்தில் கூட வேலை செய்வதற்கான புத்த பிக்குகள் கிடைத்தனர். பின்னர் படையுடன் கிளம்பி வரும்படி ஓலை ஒன்றை வாதாபி புலிக்கேசிக்கு அனுப்பி விட்டு பாண்டிநாடு நோக்கி பயணப்பட ஆயத்தமானான் நாகநந்தி. இதற்கிடையில் சிற்ப, சித்திர கலைகளில் அதிக ஈடுபாடு கொண்ட நாகநந்தி காஞ்சியில் புகழ் பெற்று விளங்கிய மாமல்லபுரம் சிற்ப வேலைப்பாடுகளை கேள்வியுற்று அங்கே சென்றான். அங்கே செதுக்கி உள்ள சிற்ப வேலைப்பாடுகளைப் பார்த்து வியந்து, அந்த வேலைகளை நடத்தி வைக்கும் ஆயன சிற்பியை பார்க்க அவரது வீடு சென்று சேர்ந்தான். அங்கே ஆயன சிற்பியின் மகளாகிய சிவகாமியின் நடனத்தில் அவரது மனதை பறிகொடுத்து அவள் மேல் காதல் கொண்டார். சிவகாமியை எப்படியாவது வாதாபி அழைத்து செல்ல திட்டம் தீட்டினான்.

இதற்கிடையில் நாகநந்தி அனுப்பிய ஓலை கிடைத்ததும் புலிக்கேசி வாதவியின் பெரும் படை ஒன்றை திரட்டி காஞ்சி நகரை கைப்பற்ற வாதாபியில் இருந்து புறப்பட்டான். வரும் வழியில் வைஜயந்தி பட்டணத்தில் போர் புரிந்து அந் நகரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். வைஜயந்தி நகரை கைப்பற்றியவுடனே அந் நகரின் செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்து பின்னர் நகரையே கொளுத்தும் படி கட்டளையிட்டான். அத்துடன் அந்த பெரும் படையுடன் துங்கப்பத்திர நதிக்கரையை கடந்து வந்து கொண்டிருந்தான். புலிக்கேசியின் பெரும் படை காஞ்சி நகரை துவம்சம் செய்ய வருவதாக கேள்வியுற்ற மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி கலக்கம் முற்றார். காரணம் வாதாவி படையில் ஐந்து லட்சம் வீரர்களும் பதினையாயிரம் யானை படையும் உண்டு. ஆனால் பல்லவ படையிடம் அவ்வளவு படை பலம் இல்லை என்பது குறைபாடாக இருந்தது. இதனால் வாதாபி படையுடன் நேருக்கு நேர் மோதுவதை காட்டிலும் ராணுவ தந்திரம் மூலம் மோதுவதே சிறந்தது என்று முடிவெடுக்கின்றார். அத்தோடு வாதாவி மன்னன் புலிக்கேசியின் ஒற்றர்கள் முன்னமே காஞ்சியில் இருந்து வேலை செய்து வருவதாக அறிந்து இருந்தார்.

    
மகேந்தர சக்கரவர்த்திக்கு அப்புறம் பட்டத்துக்கு உரியவராக இருந்தவர் அவருடைய புதல்வர் நரசிம்ம பல்லவர். இவரும் தந்தை வழியே கலைகளில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் தந்தையை போன்று யுத்தங்களை அவர் வெறுத்தது கிடையாது.போர் களங்கள் சென்று எதிரிகளை வேட்டையாட வேண்டும் என்பதும் காஞ்சியின் வீர மகபுருஷனாக திகழவேண்டும் என்பது அவரது ஆசை.  இது வரை எந்த போர்களங்களுக்கு அனுப்பாமல் மகேந்திர பல்லவர் அவன் வீரத்தை கட்டி போட்டு இருந்தார். வாதாபி பெரும் படை ஓன்று காஞ்சி நோக்கி வருவதாக தந்தை மூலம் அறிந்து கொண்ட நரசிம்ம பல்லவர் மகிழ்சியின் உச்சத்தை அடைந்தார்.  தன் வீரத்தை உலகத்திற்கு காட்டுவதற்கான காலம் கனிந்து வருவதாக எண்ணி பூரிப்படைந்தான். நரசிம்ம பல்லவரின் அவசரத்தை உணர்ந்த மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி அவனை ஆசுவாசப்படுத்தி பல்லவ சாம்ராஜ்யத்தின் நிலைமையை எடுத்துக் கூறினார். போர் செய்வதை காட்டிலும் ராணுவ தந்திரம் மூலமே புலிக்கேசியை தோற்க் கடிக்க முடியும் என்று விளக்கினார். அதன் காரணமாக மகேந்திர சக்கரவர்த்தி மட்டும் போர் முனைக்கு செல்வதாகவும், நரசிம்ம பல்லவரை காஞ்சி கோட்டைக்குள் இருக்க வேண்டும் என்றும் வாக்குறுதி பெற்றுக்கொண்டார். இதற்கிடையில் நரசிம்ம பல்லவருக்கும், நடன சுந்தரி சிவகாமிக்குமிடையே காதல் முற்றி இருந்தது. சிறு பராயத்த்லேயே இருவரும் கொண்ட நட்பினாலும், அளவிட முடியாத பாசத்தினாலும் காதல் இருவருக்கிமிடையே மலர்ந்திருந்தது. கோட்டைக்குள் அடைபட்டு கிடந்த நரசிம்ம பல்லவர் சிவகாமியை பார்க்க முடியாமல் தவித்தார். அதனால் கண்ணபிரான் என்னும் ரத சாரதி மூலம் காதல் ஓலைகளை சிவகாமிக்கு அனுப்பி கொண்டிருந்தான்.  சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்பட்ட பிரிவினால் அவர்களது காதல் முன்னிலும் பார்க்க பல மடங்காக கூடியிருந்தது.  

அச் சந்தர்ப்பத்தில் கீழைச் சோழ நாட்டை சேர்ந்த செங்காட்டங்குடி என்ற கிராமத்தில் வீரத்தில் தேர்ச்சி பெற்றவன் பரஞ்சோதி. அன்று கல்வியிலும் கலையிலும் சிறப்பு பெற்று விளங்கிய காஞ்சிக்கு சென்று கல்வி பயின்று வருவதாக தாயிடம் கூறி காஞ்சிக்கு வந்து சேர்ந்தான். வழியில் சர்ப்பம் (பாம்பு) தீண்டலுக்கு ஆளாக இருந்த பரஞ்சோதியை நாகநந்தி என்ற புத்த பிக்கு காப்பாற்றினார். இதனால் அந்த புத்த பிக்கு யார் என்று தெரியாமலே அவர் மேல் நல்ல அபிப்பிராயம் கொண்டான். புத்த பிக்குவும் காஞ்சிக்கு ஒரு வேலையாக செல்வதாக அறிந்து கொண்டு இருவரும் சேர்ந்தே காஞ்சிக்கு பிரயாணம் செய்தார்கள். இருவரும் காஞ்சியை அடைந்ததும் அங்கே  மன்னர் கட்டளைப் படி கோட்டை அவசரமாக மூடப்படுவதாக கேள்வியுற்றார்கள். எனவே ஓர் இடத்தில் இருவரும் பிரிந்து செல்ல வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. பரஞ்சோதி தொடர்ந்து தனித்து நாவுக்கரசர் மடத்தை தேடிச் செல்லும் வழியில் பல்லக்கு ஒன்றை மதம் பிடித்த யானையின் தாக்குதலில் இருந்து காப்பாற்றினான். அந்த பல்லக்கில் இருந்தவர்கள் காஞ்சி நகரின் சிற்ப கலையில் பெயர் பெற்ற ஆயன சிற்பியும், அவரது அழகிய மகளாகிய நாட்டிய கலைச் செல்வி சிவகாமியும் என்பது அப்போது பரஞ்சோதிக்கு தெரியாது. இவர்கள் இருவரும் காஞ்சி கோட்டையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். சிவகாமியின் நடன அரங்கேற்றம் இடைநடுவே நின்று போனதால் இருவருக்கும் மிகுந்த வேதனை. அனாலும் தங்களை தக்க சமயத்தில் ஆபத்தில் இருந்து காப்பாற்றிய அந்த வீர மகனை சந்திக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் பரஞ்சோதியோ யானையிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டிய தேவை அப்போது ஏற்பட்டது. இந்த வேளையில் பல்லவ சக்கரவர்த்தி கோட்டை காவலாளிகளுக்கு  புதிதாக யார் காஞ்சியை சுற்றி திரிந்தாலும் கைது செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தார்கள். இரவெல்லாம் அலைந்து திரிந்தும் பரஞ்சோதியால் நாவுக்கரசர் மடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. காஞ்சி கோட்டை காவலாளிகள் பல்லவ சக்கரவர்த்தியின் கட்டளைப் படி பரஞ்சோதியை கைது செய்து கோட்டையினும் உள்ள ஒரு அறையில் அடைத்து விட்டார்கள்.


தப்பிக்க முடியாமல் தவித்த பரஞ்சோதியை புத்த பிக்குவான  நாகநந்தி காப்பாற்றி அழைத்து செல்கின்றார். செல்லும் வழியில் மகேந்திர சக்கரவர்த்தியும், நரசிம்ம பல்லவரும் மாறுவேடத்தில் இருப்பதை அறியாமல் அவர்களின் பார்வையில் பட்டு விடுகின்றனர். பின்னர் பரஞ்சோதியும், நாகநந்தி அடிகளாரும் நடுக்காட்டில் வசிக்கும் ஆயன சிற்பியின் வீட்டிக்கு செல்கின்றனர். பரஞ்சோதி காஞ்சி வந்த நோக்கத்தை தெரிந்து கொண்ட ஆயன சிற்பி அவனை தனது சீடனாக ஏற்றுக்கொள்கின்றார். அத்தோடு அவர் அஜந்தா ஓவிய இரகசியத்தப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருந்தார். இதனை தன் நோக்கத்துக்காக பயன்படுத்திக்கொள்ள நாகநந்தி திட்டம் தீட்டினார். அதை பற்றி அறியாத ஆயனர் நாகநந்தியின் ஆசை பேச்சில் விழுந்தார். அதாவது அந்த இரகசிய முறையை அறிந்த அஜந்தா சித்திரக்காரர் ஒருவரை தனக்கு தெரியும். நாகார்ஜுன மலையிலுள்ள புத்த ஸங்கிராமத்தில் இப்போது அவர் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது என்று கூறுகின்றார். அஜந்தா ரகசியத்தை தெரிந்துவர நாகார்ஜுன மலைக்கு  ஓலையுடன் பரஞ்சோதியை அனுப்பி வைக்கின்றனர். பரஞ்சோதி போகும் வழியில் வஜ்ஜிரபாகு என்பவன் வழித்துணையாக சேர்ந்துகொண்டான். அவன் யார் என்று தெரிந்து கொள்ள பரஞ்சோதி விரும்பவில்லை.இதனால் வஜ்ஜிரபாகுவுக்கு   பெரும் உதவியாக இருந்தது. பல்லவ காலத்தில் நடந்த சரித்திர கதைகளை வஜ்ஜிரபாகு பரஞ்சோதிக்கு போகும் வழியெல்லாம் சொல்லி கொண்டே வந்தான். இறுதியாக அவர்கள் இருவரும் ஒரு பௌத்த விடுதியை அடைந்தார்கள். அன்றிரவு அங்கேயே இருவரும் தங்கினார்கள்.  இரவு மூன்றாம் ஜாம வேளையில் வஜ்ஜிரபாகு பரஞ்சோதி தங்கிருந்த அறைக்குள் பிரவேசித்து, அவன் கொண்டு வந்த ஓலையை எடுத்துக்கொண்டு வேறொரு ஓலையை அவ்விடத்தில் வைத்து சென்றுவிட்டான். பின்னர் நாகநந்தியால் பரஞ்சோதிக்கு கொடுக்கப்பட்ட ஓலையை படித்த வஜ்ஜிரபாகு வியப்படைந்து போனான். அந்த ஓலையில் "காஞ்சி சுந்தரி உனக்கு நாட்டிய சுந்தரி எனக்கு" என்று எழுதிருந்தது. வஜ்ஜிரபாகு வேடத்தில் இருந்த மகேந்திர பல்லவர் உடனே ஒரு பெரிய திட்டம் தீட்டி செயல்ப் படுத்தினார். காலையில் எழுந்து பரஞ்சோதி ஓலை கொடுக்க வாதாபி புறப்பட்டான். வழியில் வாதாபி காவலாளர்கள் அவனை பிடித்து கொண்டு புலிக்கேசியின் முன் நிறுத்தினர். கொண்டு வந்த ஓலையை புலிக்கேசி படித்து பெரும் கோபம் கொண்டான். அந்த ஓலையில் அஜந்தா ஓவியம் பற்றிய இரகசியம் அறிந்து கொள்ள வேண்டும் என்றவாறு காணப்பட்டது. உண்மையில் பரஞ்சோதி கொண்டு வந்த ஓலையை மகேந்திர சக்கரவர்த்தி மாற்றி விட்டது பரஞ்சோதிக்கு தெரியாது. ஆனால் அங்கே பரஞ்சோதி வஜ்ஜிரபாகுவை கண்டான். வஜ்ஜிரபாகுவும் புலிகேசிக்கு ஒரு ஓலை கொடுத்திருந்தான். அது காலம் தாழ்த்தி செய்ய வேண்டிய காஞ்சி முற்றுகை பற்றிய தகவல். எப்படியோ வஜ்ஜிரபாகுவும், பரஞ்சோதியும் புலிக்கேசியை ஏமாற்றி விட்டு பல்லவ படை நின்ற பாபாக்கினி நதிக்கரையை நோக்கி சென்றானர்.

தொடரும்...

நன்றி 

No comments :

Post a Comment